உச்சநீதிமன்றத்தில் மீண்டும் மீண்டும் காலஅவகாசம் கேட்கும் மாநில தேர்தல் ஆணையரிடம் உடனடியாக விளக்கம் கேட்க வேண்டும்: தமிழக கவர்னருக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: உள்ளாட்சி தேர்தல் நடத்த உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் மீண்டும் கால அவகாசம் கேட்கும் மாநில தேர்தல் ஆணையரிடம், உடனடியாக விளக்கம் கேட்க வேண்டும் என்று தமிழக கவர்னருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.  இதுகுறித்து மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கை: உள்ளாட்சித் தேர்தலை நடத்த  அக்டோபர் 31-ம் தேதி வரை மேலும் கால அவகாசம் வேண்டும் என்று தமிழ்நாடு மாநிலத்  தேர்தல் ஆணையத்தின் சார்பில் மீண்டும் உச்சநீதிமன்றத்தில் கேட்டிருப்பதற்கு திமுக சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இதை மாநிலத் தேர்தல் ஆணையம் என்றழைப்பதை விட, மாநில அவகாச ஆணையம் என்றே அழைக்கலாம் போலிருக்கிறது. அவகாசம் கேட்டுக் கொண்டே இருப்பதற்கு ஓர் ஆணையம் தேவைதானா, ஒன்றும் செய்யாமல் மக்கள் வரிப் பணத்தைச் செலவிட்டுக் கொண்டிருப்பதற்கு ஓர் ஆணையமா என்ற கேள்விகள் எழுகின்றன.  

Advertising
Advertising

அக்டோபர் 2016ல் நடத்தி முடிக்க வேண்டிய உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் உயர் நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் மாநில அரசும், மாநிலத்    தேர்தல் ஆணையமும் மாறி மாறி  கால அவகாசம் கேட்டுக் கொண்டிருப்பது பஞ்சாயத்து ராஜ் சட்டத்தையே கேலிக்குரியதாக்கும் கேடு கெட்ட செயல்.

 மாநிலத்  தேர்தல் ஆணையம் ஒன்று, இப்படி உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடந்து விடாமல் முனைப்புடன் செயல்படுவது வரலாற்றுப் பிழை. அந்த அமைப்பை, தான் ஆட்டுவித்த பொம்மை போல் ஆட வைக்கும் முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிச்சாமியின் நடவடிக்கை அரசியல் சட்டத்தையே தோற்கடிக்கும் சட்டவிரோத நடவடிக்கை. உள்ளாட்சி அமைப்புகளை காலியாகவே வைத்து- உள்ளாட்சி நிர்வாகத்தை ஏதோ தன்  பிரைவேட் லிமிட்டெட் கம்பெனி நிர்வாகம் போல் நடத்தி- முடிந்தவரை டெண்டர் ஊழலில் கொடிகட்டிப் பறக்கலாம் என்ற உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணியின் ஆசைக்கு முதலமைச்சர் பழனிச்சாமி ஆர்வத்துடன் துணை போவது முதலமைச்சர் பதவியின் கண்ணியத்திற்கே வேட்டு வைக்கிறது.

 எந்த நேரத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தினாலும் தோல்வி உறுதி என்பதால் அதிமுக ஆட்சி இப்படி அலங்கோலமான காரணங்களைக் கூறி,  உள்ளாட்சித் தேர்தலை தள்ளி வைத்துக் கொண்டிருக்கிறது. 33 மாதங்களாக உள்ளாட்சித் தேர்தலை நடத்தாதது ஒன்றே அரசியல் சட்டம் தமிழகத்தில் செயல்பாடாமல் இருப்பதற்கு போதிய காரணம் என்பதை மாநில தேர்தல் ஆணையமோ அல்லது முதல்வர் பழனிசாமியோ உணர்ந்ததாகத் தெரியவில்லை.  ஆகவே உச்சநீதிமன்றத்தில் மீண்டும் மீண்டும் கால அவகாசம் கேட்கும் மாநிலத் தேர்தல் ஆணையரிடம், தமிழக ஆளுநர் உடனடியாக விளக்கம் கேட்க  வேண்டும். அரசியல் சட்டப் பிரிவின் அடிப்படையில் உள்ளாட்சி அமைப்புகளின்  தேர்தலை நடத்துவதற்கு மாநிலத் தேர்தல் ஆணையத்திற்கு உரிய கட்டளையைப் பிறப்பிக்க வேண்டும்.

Related Stories: