×

புழு தாக்கியதால் மக்காச்சோளம் உற்பத்தி பாதிப்பு: 17 மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு 186 கோடி இழப்பீட்டை தர வேண்டும்

*  4 வாரம் அவகாசம்
* அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: புழு தாக்கியதால் மக்காசோளப் பயிர் சேதம் அடைந்ததால் பாதிக்கப்பட்ட 17 மாவட்ட  விவசாயிகளுக்கு ரூ.186.25 கோடி இழப்பீட்டு தொகையை 4 வாரங்களில் வழங்குமாறு தமிழக அரசுக்கு சென்னை  உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் சேலத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:  சேலம் மாவட்டத்தில் ஆத்தூர், தலைவாசல், கெங்கவல்லி, பெத்தநாயக்கன் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்ட மக்காச்சோளப் பயிர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் புழுக்களால் தாக்கப்பட்டு சேதமானது. இதனால், 10 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் நாசமாகின. இதையடுத்து, எங்களுக்கு இழப்பீடு கேட்டு கலெக்டரிடம் மனு கொடுத்தோம். எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, புழுக்களால் சேதமடைந்த மக்காச்சோள பயிர் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்குமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.  இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், சேலம் மட்டுமல்லாமல் நாமக்கல், திருநெல்வேலி, கோவை, பெரம்பலூர், தூத்துக்குடி உள்ளிட்ட 17 மாவட்டங்களில் 2 லட்சத்து 64 ஆயிரத்து 216 ஹெக்டேர் நிலத்தில் பயிரிடப்பட்ட மக்கா சோளப்பயிர்கள் புழுக்கள் தாக்கி சேதம் அடைந்தன. இதனால் 3 லட்சத்து 7 ஆயிரத்து 495 விவசாயிகள்  பாதிக்கப்பட்டுள்ளனர்.  இந்த புழு மற்றும் பூச்சித்தாக்குதலை பேரிடராக அறிவித்து தமிழக அரசு கடந்த 4ம் தேதி அரசாணை பிறப்பித்தது.

மக்காசோள பயிரில் புழு தாக்கியதால் பாதிக்கப்பட்ட  விவசாயிகளுக்கு ரூ. 186 கோடியே 25 லட்சத்து 7 ஆயிரத்து 782 ரூபாய் இழப்பீடாக வழங்க ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டிருந்தது.   வழக்கு விசாரணையின்போது, புழு தாக்குதலால் சேதமடைந்த மக்காசோள பயிர்களுக்கு தமிழக அரசு ஒதுக்கீடு செய்த இந்த இழப்பீடு தொகை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 4 வாரங்களில் வழங்கப்படும் என்று அரசு கூடுதல் பிளீடர் மனோகரன் நீதிபதிகளிடம் தெரிவித்தார்.  அரசு வக்கீல் கூறியதை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், விவசாயிகளுக்கு வழங்கப்படும் இந்த இழப்பீட்டு தொகையை உறுதியளித்தப்படி 4 வாரங்களில் விவசாயிகளுக்கு அரசு வழங்க வேண்டும். வழக்கு முடித்துவைக்கப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.


Tags : Worm attack, maize, farmers,
× RELATED மதுராந்தகம் அருகே வெள்ளப்புத்தூர்...