×

நெய்யாறு விஷயத்தில் சாதகமான தீர்ப்பு வரும்: முதல்வர் தகவல்

சென்னை: சட்டசபையில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைகள் மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் விளவங்கோடு விஜயதாரணி (காங்கிரஸ்) பேசியதாவது: தமிழகத்தில் 28 மாவட்டங்களில் தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. தண்ணீர் சேமிக்கும் திட்டங்களை பள்ளி மாணவர்களிடையே உருவாக்க வேண்டும். மழை காலத்தில் காவிரி ஆற்றில் ஓடும் வெள்ள நீரை குளங்களுக்கு திருப்ப வேண்டும். நீலகிரியில் பாண்டியாற்றில் இருந்து கர்நாடகா மாநிலத்திற்கு செல்லும் தண்ணீரை தடுத்து, மோயாற்றில் திருப்பி விடலாம். நீர் மேலாண்மை திட்டத்திற்கு தனி ஆணையம் செயல்படுவதாக முதல்வர் கூறியுள்ளார். அதன் மூலம் புதிய திட்டங்களை கொண் வர வேண்டும். நாடுமுழுவதும் 4087 தடுப்பணைகள் உள்ளது. இதில் ஆந்திரா, தெலுங்கானாவில் 337 தடுப்பணைகள் உள்ளது. தமிழகத்தில் 116 தடுப்பணை மட்டுமே உள்ளது.

இதில், காமராஜர் ஆட்சி காலத்தில் 78 தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளது. காவிரி ஆறு சமவெளி பகுதியாக இருப்பதால், அங்கு தடுப்பணை அமைப்பது தொடர்பாக அதை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். தமிழகத்தில் உள்ள அணைகள் மூலம் 200 டிஎம்சி மட்டுமே நீரை சேமிக்கப்படுகிறது. கர்நாடகாவில் 512 டிஎம்சி, ஆந்திராவில் 920 டிஎம்சி வரை அணைகள் சேமிக்கலாம். எனவே, கூடுதல் டிஎம்சி நீரை சேமிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. முதல்வர் எடப்பாடி : நீர் மேலாண்மை சிறப்பாக செயல்படுத்த தான் ஒரு அமைப்பை உருவாக்கியுள்ளோம். இதில், ஓய்வு பெற்ற பொறியாளர்களை வைத்து இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் மூலம் எங்கெங்கு தடுப்பணை கட்ட முடியும், எந்தெந்த நதிகளை இணைக்க முடியும் என்பது தொடர்பாக ஆய்வு செய்து வருகின்றனர். அந்த வல்லுனர்கள் அளித்த அறிக்கையின் பேரில் தான் காவிரி ஆற்றின் குறுக்கே 3 தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அணையில் ஒரு டிஎம்சி தேக்க வேண்டும் என்றால் ரூ.500 கோடி செலவு செய்ய வேண்டும். இருப்பினும் நீரை முழுமையாக சேமிக்க இந்த அமைப்பு தமிழகம் முழுவதும் ஆய்வு செய்து வருகிறது.

விஜயதாரணி : கேரளாவில் இருந்து நெய்யாற்றிற்கு தண்ணீர் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த தண்ணீர் வைத்து 93,520 ஏக்கர் நிலங்களில் பாசனம் செய்யப்பட்டு வந்தது. அந்த மாநிலத்தில் இருந்து தண்ணீர் பெற முடியாததால் விவசாயிகள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். இது தொடர்பாக வழக்கு நிலுவையில் உள்ளது என்பதை நன்கு அறிவேன். இந்த வழக்கை விரைந்து முடிக்க அரசு முயற்சி எடுக்க வேண்டும். முதல்வர் எடப்பாடி: ெநய்யாற்றிற்கு கடந்த 2004ல் கேரளா அரசு தண்ணீர் திறந்து விடுவதை திடீரென நிறுத்தி விட்டனர். இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் தமிழகத்திற்கு சாதகமான தீர்ப்பு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும்


Tags : Nayaru matter, CM
× RELATED இந்தியாவின் 73-வது கிராண்ட் மாஸ்டர்: 14 வயது சிறுவன் அசத்தல்