அஞ்சல்துறை தேர்வில் இந்தி திணிப்பு குறித்து அவையில் தீர்மானம் நிறைவேற்ற கேட்டால் கொச்சைப்படுத்துகின்றனர்: துரைமுருகன் காட்டம்

சென்னை: அஞ்சல் துறை உள்ளிட்ட போட்டி தேர்வுகளில் இந்தி திணிப்பு முயற்சியை கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற கேட்டால் கொச்சைப்படுத்துகின்றனர் என்று துரைமுருகன் தெரிவித்தார். சட்டசபையில் திமுக வெளிநடப்பு செய்த பின்பு எதிர்கட்சி துணை தலைவர் துரைமுருகன் நிருபர்களிடம் கூறியதாவது:

அஞ்சல் துறையில் போட்டி தேர்வு நேற்று (நேற்றுமுன்தினம்) நடந்தது. இந்த தேர்வு ஆங்கிலம், இந்தியில் மட்டும் தான் எழுதலாம் என்று அறிவிப்பு செய்திருக்கிறார்கள். கலெக்டர் உத்யோகத்துக்கு போகிறவர்கள் கூட தமிழில் தேர்வு எழுதி வெற்றி பெறலாம் என்றிருக்கிறது. ஆனால் போஸ்ட்மேன் வேலை கிடைக்க வேண்டுமானால் தமிழ் தெரிய தேவையில்லை, இந்தி தான் தெரிய வேண்டும் என்ற ஒரு நிலையை ஏற்படுத்தி வருகின்றனர்.
Advertising
Advertising

எந்தெந்த துறையில் இந்தியை நுழைக்க வேண்டுமோ அங்கெல்லாம் இந்தியை நுழைப்பது நமது நித்திய கடன் என்று மத்திய அரசு செய்கிறது. அவருடைய ஆட்சியில், இந்தியாவை ஒரே நாடாக ஆக்க வேண்டும். ஒரே மொழி, ஒரே மதம் தான் இருக்க வேண்டும் என்பதே அவர்களது கொள்கை. இதுவரை எத்தனையோ முறை இந்தியை திணிக்க முயற்சித்திருக்கிறார்கள். அதை தமிழகம் தொடர்ந்து எதிர்த்து வருகிறது.  ஒவ்வொரு நாளும் பத்திரிகைகளில் அந்த துறையில் இந்தி திணிக்கிறார்கள். இந்த துறையில் இந்தி திணிக்கிறார்கள் என்று செய்தி தான் வருகிறது. அவர்கள் இதே வேலையை தான் செய்து வருகிறார்கள். இது தொடர்பாக சட்டசபையில் திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு அவையில் கவனத்தை ஈர்க்கும் வகையில் தீர்மானம் கொண்டு வந்தார்.

அந்த உரை அறிவுபூர்வமாக இருந்ததால், ஆளும்கட்சியினரும் அதை ஏற்றுக் கொள்கிறோம் என்று கூறினர். அமைச்சர் ஜெயக்குமார் எங்களுக்கும் இந்த கொள்கை தான் என்று கூறினார். நான் சொன்னேன், ‘நீங்களும் இந்தியை எதிர்க்கிறீர்கள். நாங்களும் எதிர்க்கிறோம். எனவே இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசை கண்டிக்கிற வகையில் இல்லாவிட்டாலும், வற்புறுத்தும் வகையிலாவது சட்டசபையில் ஒரு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்’ என்று அவர்களிடம் கேட்டோம். ஆனால் அவர்கள் கொண்டு வருவோம் அல்லது கொண்டு வரமாட்டோம் என்றோ பதில் சொல்லவில்லை.  அதனால் எங்கள் பகுதியில் இருந்த உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று கேட்டோம். அவர்கள் எந்த பதிலும் சொல்லவில்லை.

ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ‘நீங்கள் வெளிநடப்பு செல்ல திட்டமிட்டு ஏதோ ஒரு காரணத்தை தேடுகிறீர்கள்’ என்று எங்களை கொச்சைப்படுத்தினார். நாங்கள் 65லிருந்தே இந்தியை எதிர்த்து போராடி வருகிறோம் என்று அவரிடம் சுட்டி காட்டினோம்.  மாநிலத்தில் பெரும் பிரச்னையை நாங்கள் எடுத்து வைத்த போது, எங்களை கொச்சைப்படுத்தி பேசிய முதல்வரை கண்டித்து வெளிநடப்பு செய்கிறோம். எனவே, இந்த ஆட்சியினர், மத்திய அரசு இந்தியை திணித்தாலும் ஏற்று கொள்வார்கள். வாயில் திணித்தாலும் வாங்கி கொள்வார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: