நேபாளத்தில் வெள்ள பாதிப்பு உதவி செய்ய அரசு கோரிக்கை

காத்மாண்டு: நேபாளத்தில் வெள்ள பாதிப்புகளை சீர்செய்யும் வகையில் சர்வதேச அமைப்புகள் உதவ வேண்டும் என நேபாள அரசு அழைப்பு விடுத்துள்ளது.
நேபாளத்தில் கடந்த வியாழக்கிழமை முதல் கனமழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக 25 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. மேலும், மழையினால் ஆங்காங்கே நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. 10,385 வீடுகள் மழையால் சேதம் அடைந்துள்ளன. 35 பேர் மாயமாகியுள்ளனர். பாகமதி, காமாலா, சப்தகோசி மற்றும் அதன் கிளை ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி தண்ணீர் ஓடுகிறது. இதனால், அந்த பகுதிகளில் உள்ளவர்களை அரசு தொடர்ந்து எச்சரித்து வருகிறது.

 பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வது தொடர்பாக உலக சுகாதார அமைப்பு, யூனிசெப் உள்ளிட்ட அமைப்புகள் பங்கேற்ற கூட்டம் நேபாளத்தில் சுகாதார அமைச்சகத்தில் நேற்று முன்தினம் நடந்தது. இதுகுறித்து சுகாதார அவசர செயல்பாட்டு மையம் தலைவர் சூடாமணி பண்டாரி கூறுகையில், ‘‘வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளில் உதவ வேண்டும் என, கூட்டத்தில் பங்கேற்ற சர்வதேச அமைப்புகளிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது’’ என்றார். இதற்கிடையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு வயிற்றுப்போக்கு, டைபாய்டு, கல்லீரல் வீக்கம், மலேரியா, டெங்கு பாதிப்புகள் ஏற்படும் என சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட பகுதிகளில் அவசர சிகிச்சைகள், நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள நேபாள அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.


× RELATED நீலகிரி வெள்ள பாதிப்புகள் - துணை...