கர்நாடக அணையில் இருந்து தமிழகத்திற்கு இன்று தண்ணீர் திறப்பு

பெங்களூரு: காவிரியில் இருந்து மண்டியா மாவட்ட விவசாயத்திற்கு மட்டுமில்லாமல் தமிழகத்திற்கும் இன்று நள்ளிரவு முதல் தண்ணீர் திறக்க அமைச்சர் புட்டராஜு தலைமையில் நடந்த நீர்ப்பாசன அதிகாரிகள் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் டெல்லியில் நடந்தபோது, காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிடும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிடக்கோரி தமிழகம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.  இதையடுத்து மழைக் காலத்தில் அணைக்கு நீர்வரத்து வரும்போது தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு ஆணையம் உத்தரவிட்டது.

இந்நிலையில் கடந்த 8ம் தேதி மண்டியா மாவட்ட கரும்பு விவசாயிகள் முதல்வர் குமாரசாமியை விதானசவுதாவில் சந்தித்து பேசினர். அப்போது காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கரும்பு பயிர் செய்யப்பட்டுள்ளது. போதிய நீரில்லாமல் பயிர்கள் வாடும் நிலைக்கு வந்துள்ளதால் அதை காப்பாற்ற உடனடியாக கே.ஆர்.எஸ். அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதை தொடர்ந்து முதல்வர் குமாரசாமி கடந்த 9ம் தேதி டிவிட்டர் செய்தியில், தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை மதித்தும், மண்டியா மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையிலும் காவிரியில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

மேலும் ஆணையத்தின் உத்தரவை செயல்படுத்தி உள்ளதை ஆணையத்தின் கவனத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி இருந்தார்.  

ஆனால் முதல்வர் உத்தரவிட்டும் கே.ஆர்.எஸ். அணையில் இருந்து தண்ணீர் திறக்காமல் அதிகாரிகள் அலட்சியம் செய்தனர். இதனால் மீண்டும் விவசாயிகள் போராட்டத்தில் குதித்தனர். இந்நிலையில் கே.ஆர்.எஸ். அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறித்து நீர்ப்பாசன துறை அதிகாரிகளுடன் அமைச்சர் சி.எஸ்.புட்டராஜு நேற்று ஆலோசனை நடத்தினார். அதில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் உள்ள அணைகளில் தற்போதுள்ள நீரின் அளவு, தென்மேற்கு பருவமழை எப்படி இருக்கும் என்பது உள்பட பல விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.  இறுதியாக கே.ஆர்.எஸ். அணையில் இருந்து இன்று  நள்ளிரவு முதல் தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டது.

Related Stories: