தனிநபருக்கு கிடைக்கும் நீரின் அளவு குறைந்தது: மாநிலங்களவையில் அமைச்சர் தகவல்

புதுடெல்லி: தனிநபருக்கு கிடைக்கும் நீரின் அளவு 54,526 கன அடியாக குறைந்துள்ளதாக மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் மாநிலங்களவையில் நேற்று தெரிவித்தார். மாநிலங்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது துணைக்கேள்வி ஒன்றுக்கு பதிலளித்து ஜல்சக்தி துறை அமைச்சர் ஷெகாவத் கூறியதாவது:

நீரை பாதுகாக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும். விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் நீர் பாதுகாப்பை பெரிய மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும். பல வெளிநாடுகளில் கழிவுநீரை மறுசுழற்சியின் மூலம் குடிநீராக்கி மக்களுக்கு விநியோகின்றனர். ஆனால் இந்தியாவில் அதற்கான சூழ்நிலை ஏற்படவில்லை.

நீர் என்பது மாநிலத்தின் பிரச்னை. நீர் விநியோக திட்டங்களை சரியாக நடைமுறைப்படுத்துதல், பராமரித்தல், பங்கிடுதல், திட்டமிடுதல் ஆகியவை மாநில அரசுகளின் முக்கிய கடமையாகும். ஆனாலும் கிராமப் புறங்களின் குடிநீர் தேவையை மேம்படுத்த, தேசிய கிராமப்புற குடிநீர் திட்டத்தின் மூலம், மத்திய அரசு போதுமான நிதி, தொழில்நுட்ப வசதிகளை செய்து தருகிறது. நிதி ஆயோக்கின் அறிக்கையில், கடந்த 2001ம் ஆண்டில் 64,132 கன அடியாக இருந்த தனிநபருக்கு கிடைக்கும் நீரின் அளவு 2011ம் ஆண்டில் 54,526 கன அடியாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குடிநீருக்காக மக்கள் அவதிப்படும் நிலையை போக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

பற்றாக்குறை நிலவும் காலக்கட்டத்தில் கிராமங்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வது குறித்து அமைச்சக செயலாளர் வறட்சி நிலவும் சில மாநிலங்களுக்கு கடந்த மே 29ம் தேதி கடிதம் அனுப்பி உள்ளார். நீர் நிலைகளை தூர் வாருதல், மழை நீர் சேகரிப்பு ஆகியவை பற்றி பிரதமர் மோடியும் அனைத்து பஞ்சாயத்து தலைவர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார். மத்திய அரசின் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது போல், ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் வரும் 2024 ஆண்டிற்குள் அனைத்து கிராமங்களுக்கும் குழாய் மூலம் போதிய குடிநீர் வழங்கப்படும். இவ்வாறு அமைச்சர் ஷெகாவத் கூறினார்.

Related Stories: