திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்ட ஆணை சமர்ப்பிக்க வேண்டும்: ஆந்திர உயர்நீதிமன்றம் உத்தரவு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 3 விதமான விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்ட ஆணையை தாக்கல் செய்ய வேண்டும் என்று தேவஸ்தானத்துக்கு ஆந்திர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் விஐபி தரிசனம் ரத்து செய்ய வேண்டும் என்ற மனு மீது  ஆந்திர உயர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணை   நடைபெற்றது. இதில் எல்1, எல்2,  எல்3 என மூன்று ரகமான தரிசனமாக பிரித்து முக்கிய பிரமுகர்கள் என்ற பெயரில் அனுமதிக்கப்படுவது குறித்து நீதிமன்றம் கேட்ட பிறகும் எதற்காக விளக்கம் அளிக்கப்படவில்லை என  தேவஸ்தான அதிகாரிகளிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த தேவஸ்தான வழக்கறிஞர், விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்படும் என அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி தெரிவித்ததாக கூறினார்.

அப்போது எதிர்தரப்பில் வாதாடிய மனுதாரர் வழக்கறிஞர் உமேஷ் சந்திரா, ‘‘தேவஸ்தான அறங்காவலர் குழு இன்னும் முழுமையாக அமைக்காத நிலையில் தலைவர் மட்டும் எடுக்கும் முடிவு செல்லாது. தலைவர் தெரிவித்ததை நடைமுறைக்கு எடுத்துக்கொள்ளவும் முடியாது. பிரேக் தரிசனம் முற்றிலும் ரத்து செய்யப்பட்டதாக இணை செயல் அலுவலர் உத்தரவாக ரத்து செய்யப்பட்ட ஆணையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் எல்1, எல்2, எல் 3 ஆகிய 3 விதமான தரிசனங்களை ரத்து செய்து புரோட்டாகால் என்ற பெயரில் மிக முக்கிய பிரமுகர்களுக்கு என்ற முன்னுரிமையின் அடிப்படையில் தரிசனத்தை மீண்டும் வேறு வழியில்  கொண்டு வருவார்கள்’’ எனவும் தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதி, தேவஸ்தானம் 3 விதமான தரிசனங்களை ரத்து செய்வதாக இருந்தால், அதன்பிறகு எந்த அடிப்படையில் மிக முக்கிய பிரமுகர்களை தரிசனத்துக்கு கொண்டு செல்வார்கள் என்பது குறித்த முழு விவரங்கள் அடங்கிய விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். மேலும் இதுகுறித்து மேற்கொண்டு விசாரணை 18ம் தேதி நடைபெறும் என்று உத்தரவிட்டார். அன்றைய தினம் இருதரப்பு வாதத்தையும் கேட்ட பின்னர் இறுதி தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

Related Stories: