பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கு திருநாவுக்கரசு உள்ளிட்ட 5 பேருக்கு காவல் நீட்டிப்பு

கோவை: பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கில் கைதாகி சிறையில் உள்ள திருநாவுக்கரசு, மணிவண்ணன் உள்ளிட்ட ஐந்து பேரின் காவலை நீட்டித்து கோவை நீதிமன்றம்  உத்தரவிட்டது.  பொள்ளாச்சியில் மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்து படம் எடுத்து மிரட்டிய வழக்கில் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த சபரிராஜன் (25), சதீஸ் (28), வசந்தகுமார் (24), திருநாவுக்கரசு (27) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் 4 பேரும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

Advertising
Advertising

 அதில் புகார் கொடுத்த பெண்ணின் சகோதரனை தாக்கிய வழக்கில் கைதான மணிவண்ணன் பாலியல் வன்கொடுமை வழக்கில் சேர்க்கப்பட்டார். இதற்கிடையே இவ்வழக்கு சிபிசிஐடியில் இருந்து சிபிஐக்கு மாற்றப்பட்டது. கைதான 5 பேரும் கடந்த வாரம்  கோவை மத்திய சிறையில் இருந்து சேலம் சிறைக்கு மாற்றப்பட்டனர். இந்நிலையில் கைதான திருநாவுக்கரசு மற்றும் அவரது கூட்டாளிகள் 4 பேருக்கு நேற்றுடன் நீதிமன்ற காவல் முடிந்ததால், சேலம் சிறையில் இருந்து வீடியோ கான்பிரன்ஸ் மூலம் கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி நாகராஜன் முன் ஆஜர்படுத்தப்பட்டனர். அதில் திருநாவுக்கரசு, மணிவண்ணன் உள்ளிட்ட 5 பேரின் நீதிமன்ற காவலை ஜூலை 29ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Related Stories: