×

தூர்வாராமலேயே சீரமைக்கப்பட்டதாக முறைகேடு குளத்தில் இறங்கி உண்ணாவிரதம்: திருச்சி அருகே விவசாயிகள் போராட்டம்

திருச்சி: தூர்வாரும் பணி நடக்காமலே நடந்ததாக முறைகேடு குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விவசாயிகள் குளத்தில் இறங்கி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியம் நவலூர் குட்டப்பட்டு ஊராட்சிக்கு உட்பட்டது பாப்பான்குளம். சுமார் 60 ஏக்கர் பரப்புள்ள இந்த குளம் மூலம் 300 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. கடந்த 2017-18ல் இந்த குளத்தில் 3 கட்டமாக சீரமைப்பு பணிகள் நடந்ததாக அங்கு போர்டு வைக்கப்பட்டு உள்ளது.
இதற்கு பல லட்சங்கள் செலவிடப்பட்டதாகவும் அறிவிப்பு பலகையில் கூறப்பட்டுள்ளது. ஆனால் அந்த குளத்தில் தூர்வாரும் பணி, கரையை பலப்படுத்தும் பணி, மதகுகள் சீரமைப்பு உள்ளிட்ட எந்த பணியும் நடைபெறவில்லை.

இந்த குளத்தில் பணியே செய்யாமல் முறைகேடு நடந்து உள்ளது. இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், குளத்தை தூர்வாரி, கரையில் பலன் தரும் மரங்களை நடவும் வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்டத் தலைவர் சின்னத்துரை தலைமையிலான விவசாயிகள் நேற்று பாப்பான்குளத்தில் இறங்கி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் சிவக்குமார், மணிகண்டம் ஒன்றிய ஆணையர் மருதைதுரை மற்றும் போலீஸ் அதிகாரிகள் வந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, வரும் நிதி ஆண்டில் பாப்பான்குளம் தூர்வாரப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து விவசாயிகள் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டனர்.


Tags : Farmers' protest , Trichy
× RELATED மதுராந்தகம் அருகே வெள்ளப்புத்தூர்...