ஆயுஷ் படிப்புக்கு முறையான கவுன்சலிங்: இணை இயக்குநர் ஆஜராக உத்தரவு

மதுரை: ஆயுஷ் படிப்புகளுக்கு முறையான கவுன்சலிங் கோரிய வழக்கில், இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கான இணை இயக்குநர் ஆஜராக  ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.  கன்னியாகுமரி மாவட்டம், நாகப்பள்ளிவிளையைச் சேர்ந்த அப்புநடேசன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:  ஆயுர்வேதம், சித்தா, யுனானி, ஓமியோபதி, யோகா, இயற்கை மருத்துவம் உள்ளிட்ட மருத்துவ படிப்புகள் இந்திய மருத்துவ முறையிலான ஆயுஷ் படிப்புகளாகும். இதற்கான கல்லூரிகள் டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்குகின்றன.  இந்த மருத்துவக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கவுன்சலிங் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு காலகட்டத்தில் நடக்கின்றன.

மற்ற தொழில்முறை படிப்புகளுக்கு ஆண்டுதோறும் குறிப்பிட்ட காலக்கட்டத்தில் கவுன்சலிங் நடத்தப்படுகிறது. ஆனால், ஆயுஷ் படிப்புகளுக்கு வெவ்வேறு காலக்கட்டத்தில் நடப்பதால் மாணவர்கள் சேர்வதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது. இதற்காக காத்திருக்க வேண்டியுள்ளது. இதனால் காலதாமதத்தை தவிர்க்கும் வகையில் மற்ற படிப்புகளை தேர்வு செய்கின்றனர். எனவே, ஆயுஷ் படிப்புகளுக்கும் இதர தொழில்படிப்புகளுக்கு நடத்துவதைப் ேபால கவுன்சலிங் நடத்தி மாணவர் சேர்க்கை நடத்த உத்தரவிட வேண்டும்.  இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.   இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், பி.புகழேந்தி ஆகியோர், இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கான இணை இயக்குநர் ஆஜராக உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 30க்கு தள்ளி வைத்தனர்.

Related Stories: