×

இமாச்சலப் பிரதேசத்தில் ஓட்டல் கட்டிடம் இடிந்து விழுந்ததில் ராணுவ வீரர்கள் உட்பட 14 பேர் பலி

சிம்லா: இமாச்சலப் பிரதேசம் சோலான் மாவட்டத்தில் 4 மாடி ஓட்டல் இடிந்து விழுந்தது. இதில் 13 ராணுவ வீரர்கள் உட்பட 14 பேர் இறந்தனர்.  இமாச்சலப் பிரதேசத்தின் சோலான் மாவட்டத்தில் நஹான் - குமார்ஹத்தி சாலையில் பிரபல உணவகம் ஒன்று உள்ளது. 4 மாடி கட்டிடத்தில் செயல்பட்டு வரும் இந்த உணவகத்துக்கு ராணுவ வீரர்கள் பலர் வாடிக்கையாளர்களாக உள்ளனர். நேற்று முன்தினம் மாலை கனத்த மழை பெய்ததில் இந்த கட்டிடம் இடிந்து விழுந்தது. இதை தொடர்ந்து, ராணுவ வீரர்கள் மற்றும் சிஆர்பிஎப் வீரர்கள் விரைந்து வந்து  மீட்புப் பணியில் ஈடுபட்டனர். பின்னர், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஹெலிகாப்டரில் வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். நேற்று வரை 13 ராணுவ வீரர்கள் மற்றும் ஒருவர் உட்பட 14 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதுதவிர 17 ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் 11 பேர் பலத்த காயம் அடைந்தனர்.  காயம் அடைந்த வீரர் ஒருவர் கூறுகையில், கட்டிடம் இடிந்து விழும்போது உணவகத்தில் 35 ராணுவ வீரர்கள் இருந்தனர்.

அவர்களில் 30 பேர் இளநிலை அதிகாரிகள் என தெரிவித்தார். ஆனால், ஓட்டல் ஊழியர்கள் உட்பட கட்டிடத்தில் சுமார் 50 பேர் இருந்ததாக மற்றொரு ராணுவ வீரர் தெரிவித்துள்ளார்.  மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் சம்பவ இடத்தை நேற்று காலை நேரில் பார்வையிட்டார். கட்டிட உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணைக்கு பிறகு, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
 இமாச்சலப் பிரதேச பகுதியில் பல கட்டிடங்கள் மிக மோசமான நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. பெரும்பாலான கட்டிடங்கள் விதிகளை மீறி கட்டப்பட்டவை. இது குறித்தும் விசாரணை நடத்தப்படும் என  அதிகாரிகள் தெரிவித்தனர்.


Tags : Himachal Pradesh, hotel, army soldiers, 14 killed
× RELATED தொப்பூர் அருகே 2 லாரிகள் மீது டேங்கர் லாரி மோதி விபத்து-4 பேர் படுகாயம்