×

திருத்தம் செய்யப்பட்டமோட்டார் வாகன சட்டம் மக்களவையில் தாக்கல்: விபத்தில் இறந்தால் நஷ்டஈடு 5 லட்சம்

புதுடெல்லி: மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதாவை, சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி மக்களவையில் நேற்று தாக்கல் செய்தார்.
திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தை மக்களவையில் மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி நேற்று மீண்டும் தாக்கல் செய்தார்.  இதில் போக்குவரத்து விதிமுறை மீறல்கள் ஒவ்வொன்றுக்கு அபராதம் உயர்த்தப்பட்டுள்ளது. பழகுநர் ஓட்டுனர் உரிமத்தை(எல்எல்ஆர்) ஆன்லைன் மூலம் வழங்குவது, ஓட்டுநர் உரிமத்தை காலாவதி தேதிக்கு முன்போ அல்லது பின்போ புதுப்பித்துக் கொள்வது, விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்துக்கு உதவும் வகையில் இன்சூரன்ஸ் தொகை விரைவில் கிடைக்கச் செய்வது போன்ற விதிமுறைகள் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்த மசோதாவில் உள்ள சில விதிமுறைகளுக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி சவுகதா ராய் பேசுகையில், ‘‘மசோதாவில் உள்ள சில பிரிவுகள் மாநில அரசுகளின் உரிமைகளை பறிப்பதாக உள்ளது’’ என குற்றம் சாட்டினார். மக்களவை காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி பேசுகையில், ‘‘மசோதாவின் ஒரு சில பிரிவுகளைத்தான் எதிர்க்கிறோம். ஒட்டு மொத்த மசோதாவையும் எதிர்க்கவில்லை’’ என்றார். இதற்கு பதில் அளித்து நிதின் கட்கரி கூறியதாவது:
மசோதாவின் அனைத்து அம்சங்கள் குறித்தும் விவாதிக்க நான் தயாராக இருக்கிறேன். நீண்ட ஆலோசனைக்குப் பிறகும், முந்தைய ஆட்சிக்காலத்தில் மாநில போக்குவரத்து அமைச்சர்களின் பரிந்துரைகளின் படியும் இந்த மசோதா தயார் செய்யப்பட்டது. இதில் உள்ள எந்த பிரிவுகளும் மாநில அரசுகளை கட்டுப்படுத்தவில்லை.

இதை அமல்படுத்துவது குறித்து மாநிலங்கள் முடிவு செய்து கொள்ளலாம். மாநில அரசுகளின் உரிமைகள் பறிக்கப்படாது. நாட்டில் 30 சதவீத ஓட்டுநர் உரிமங்கள் போலியானது.  ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்துக்களில் 1.5 லட்சம் பேர் இறக்கின்றனர், 5 லட்சம் பேர் காயம் அடைகின்றனர். இந்த மசோதாவை கடந்த 5 ஆண்டு காலத்தில் நிறைவேற்ற எனது துறை தவறிவிட்டது. ஆனால் கடந்த 5 ஆண்டுகளில் விபத்துக்கள் 3 முதல் 4 சதவீதம் குறைந்துள்ளது. குறிப்பாக இந்த காலக்கட்டத்தில் தமிழகத்தில் விபத்துக்கள் 15 சதவீதம் குறைந்துள்ளன. இன்னும் அதிக மக்களின் உயிரை காப்பாற்ற வழிசெய்யும் இந்த மசோதவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். புதிய மசோதாவின்படி, வாகன விபத்துக்களில் இறந்தால் நஷ்டஈடு 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல், கடுமையான காயம் அடைபவர்களுக்கு 2.50 லட்சம் நஷ்டஈடாக வழங்க புதிய மசோதா வகை செய்கிறது.


Tags : Motor Vehicle Act, Lok Sabha, Rs 5 Lakhs
× RELATED இன்று மகரஜோதி தரிசனம்: சபரிமலையில் 1 லட்சம் பக்தர்கள்