×

தமிழகம் முழுவதும் பல இடங்களில் சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை

சென்னை: தமிழகத்தில் பல இடங்களில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தி கணக்கில் வராத பணத்தை பறிமுதல் செய்தனர்.தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவிற்கு தாராளமாக லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்டங்களில் உள்ள சார்பதிவாளர்  அலுவலகங்களில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.  நாமக்கல் தாலுகா அலுவலகம் பின்புறம் சார்பதிவாளர் அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று மாலை திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது,  சார்பதிவாளர் சுந்தரவடிவேல் மற்றும் 6 அலுவலர்கள் அலுவலகத்தில் இருந்தனர். அலுவலகத்தின் கதவை இழுத்து மூடிய போலீசார், யாரையும் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை.  பின்னர் ஒவ்வொரு அலுவலரையும் தனியாக அழைத்து,  ஊழல் புகார் குறித்து வாக்குமூலம் பதிவு செய்தனர். இந்த ேசாதனையின் போது, அலுவலகத்தில் இருந்த கணக்கில் வராத ₹42 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சோதனை இரவு 8 மணியை தாண்டியும் நீடித்தது. இதை  தொடர்ந்து அந்த அலுவலக வளாகத்தில் சுற்றிக்கொண்டிருந்த புரோக்கர்கள் தப்ப முயன்றனர். அவர்களையும் அங்கேயே பல மணி நேரமாக அமர வைத்து போலீசார் விசாரித்தனர்.

திருச்சி: திருச்சி உறையூரில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை செய்தனர். போலீசார் வருவதை கண்ட புரோக்கர்கள் அலறி அடித்து தப்பியோடினர். மேலும் அலுவலகத்தில் பணியில் இருந்த  சார்பதிவாளர் அலுவலக அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து நேற்று நடந்த பத்திரப்பதிவுகள் குறித்தும் விசாரித்தனர். இது குறித்து லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் கூறுகையில்,  பத்திரப்பதிவுக்கு லஞ்சம் வாங்குவதாக வந்த தகவலை அடுத்து இந்த சோதனை நடத்தப்பட்டது. தொடர்ந்து விசாரித்து வருகிறோம் என்றனர். இதேபோல, சிதம்பரம், கோவை சரவணம்பட்டி, அவிநாசி, செஞ்சி, அரியலூர் மாவட்டம் கீழப்பழவூர், தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களிலும் நேற்று ஒரே நாளில் போலீசார்  அதிரடி சோதனை நடத்தி கணக்கில் வராத பணம் மற்றும் ஆவணங்களை கைப்பற்றினர்.

Tags : throughout, Tamil Nadu,Representative, Police raid , bribery
× RELATED தமிழக கவர்னர் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொண்டார்