×

திண்டுக்கல்லில் 18 லட்சம் மோசடி புகார் ஆவின் பொதுமேலாளர் சஸ்பெண்ட்: ஆளுங்கட்சியினரும் சிக்குகின்றனர்?

திண்டுக்கல்: திண்டுக்கல் ஆவினில் 18 லட்சம் மோசடி செய்ததாக ஆவின் பொதுமேலாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்ட ஆவின் பொதுமேலாளர் முகம்மது பரூக். தலைவராக அதிமுகவை சேர்ந்த செல்லமுத்து செயல்படுகிறார். பொதுமேலாளர் முகம்மது பரூக், ஆவின் பாலகமே இல்லாத செந்துறை பகுதியில் அமைத்ததாக 18 லட்சம்  செலவு கணக்கு காட்டியதாகவும், மேலும் விவசாயிகளிடம் வாங்கிய பாலுக்கு பணம் தராமல் பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாகவும் புகார் எழுந்தது. அரசு நடத்தும் ஆவின் பாலகத்தை தனக்கு வேண்டப்பட்ட தனியாருக்கு விற்பனை  செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.ஆவின் தலைவர் செல்லமுத்துவுக்கு பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள அரசு கார் இருக்கும்போதே, ₹32 லட்சத்திற்கு புதிய சொகுசு கார் வாங்குவதற்கு  கையெழுத்திட்டுள்ளார். இதற்காக கொட்டேஷனும் தயாரிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் தொழிற்பேட்டைக்கு வரும் பாலை பதனிடும் பிரிவில் அதிகளவு முறைகேடுகள் செய்ததாகவும் புகார்கள் எழுந்தன. இந்த புகாரின் அடிப்படையில் சென்னை ஆவின் பெடரேஷன் குழுவினர் திண்டுக்கல்லில் தங்கி ஆய்வு நடத்தினர்.   இதன் அடிப்படையில் பொதுமேலாளர் முகம்மது பரூக் 18 லட்சம் மோசடி செய்த குற்றத்திற்காக மட்டும்  நேற்று அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும் ஆவின் முறைகேட்டில் ஈடுபட்ட மேலாளர் தினகரன் பாண்டியன், விற்பனை  பிரிவு மேலாளர் வெங்கடேஷன் மீது விசாரணை நடந்து வருகிறது.இது குறித்து ஆவின் ஊழியர்கள் கூறியதாவது, ‘‘ஆவின் தலைவர் தலைமையில் கடந்த மாதம் நடந்த கூட்டத்தில் கூச்சல், குழப்பம், கலவரம் ஏற்பட்டது. அப்போதே நாங்கள் பொதுமேலாளர் மீது புகார்கள் வைத்தோம். அதை யாரும்  கண்டுகொள்ளவில்லை. திண்டுக்கல், நத்தம், கலெக்டர் அலுவலகங்களில் ஆவின் பால் விற்பனை நிலையங்களில் பல லட்சம் ரூபாய் மோசடி நடந்துள்ளது. ஆவின் தலைவருக்கு கார் இருக்கும்போது, புதிய காருக்கு கொட்டேஷன் தயாரிக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 18 லட்சம் மோசடிக்கு நடவடிக்கை எடுத்துள்ளனர். அடுத்ததாக விசாரணை நடந்து வருகிறது. இதில் பல ஆளுங்கட்சி  பிரமுகர்களும் சிக்குவார்கள். திண்டுக்கல் ஆவினில் தொடர்ந்து பல ஆண்டுகளாக முறைகேடுகள் நடந்து வருகிறது. உயரதிகாரிகள் இப்போதுதான் விழித்துள்ளனர்’’ என்றனர்.

Tags : 18 lakh, fraud ,Dindigul, Awin, General Manager
× RELATED காரில் ரூ.11 லட்சம் சிக்கிய விவகாரம்:...