தனியார்மயமாக்க முயற்சியை கண்டித்து இந்தியா முழுவதும் 60 நிமிடம் ரயில் நிறுத்த போராட்டம்: தெற்கு ரயில்வே ஊழியர் சங்கம் முடிவு

திருச்சி: தனியார் மயமாக்கல் முயற்சியை கண்டித்து இந்தியா முழுவதும் 60 நிமிடம் (ஒரு மணி நேரம்) ரயில் நிறுத்தப் போராட்டம் நடத்த திட்டமிடுவதாக தெற்கு ரயில்வே ஊழியர் சங்க பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார். தெற்கு ரயில்வேயில் உள்ள மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட கோட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் திருச்சியில் நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்ட தெற்கு ரயில்வே ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் சூர்யபிரகாசம்  அளித்த பேட்டி: இரண்டாவது முறையாக பா.ஜ.க.அரசு ஆட்சிக்கு வந்தவுடன் ரயில்வே துறையை மீண்டும் தனியார் மயமாக்க தீவிர முயற்சிகள் எடுத்து வருகிறது. இந்தியா முழுவதும் 13 லட்சம் அரசு ஊழியர்கள் ரயில்வேயில் பணியாற்றுகிறார்கள். இந்த  நிலையில் ரயில்வே தனியார் மயமாக்கப்பட்டால் ரயில் பயணச்சீட்டுகளின் விலை 26 சதவிகிதம் உயரும். பாதுகாப்பான பயணம் இருக்காது. தொழிலாளர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகும்.

ரயில்வேயை தனியார் மயமாக்குவதைக் கண்டித்து இந்தியா முழுவதும் விரைவில் ஒரு மணி நேர ரயில் நிறுத்தப் போராட்டத்தை நடத்த உள்ளோம். இதில் இந்தியா முழுவதும் உள்ள 13 லட்சம் தொழிலாளர்கள் ஈடுபடவுள்ளனர். ரயில்வே  தொழிற்சங்க அகில இந்திய அமைப்பு விரைவில் போராட்டத் தேதியை அறிவிக்கும். தனியார் மயமாக்கும் முயற்சியை கைவிடும் வரை தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்துவோம். புதிய ஓய்வூதியத்திட்டத்தை ரத்து செய்து பழைய  ஓய்வூதியத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: