×

தபால் துறை தேர்வில் தமிழ் மொழி புறக்கணிப்பு திமுக - அதிமுக காரசார மோதல்: முதல்வரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக வெளிநடப்பு

சென்னை: தபால் துறை தேர்வில் தமிழ் புறக்கணிக்கப்படுவது  தொடர்பாக பேரவையில் பெரும் மோதல் ஏற்பட்டது. முதல்வர் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக வெளிநடப்பு செய்தது.  சட்டபேரவையில் கேள்வி நேரம் முடிந்தவுடன் திமுக எம்எல்ஏ தங்கம் தென்னரசு கவன ஈர்ப்பு தீர்மானம் ஒன்றை கொண்டு வந்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது: தபால் துறைக்கான போட்டி தேர்வுகள் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் நடத்தப்படாது என்று மத்திய அரசு அறிவித்தது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மத்திய அரசின் இந்த முடிவு வேதனை அளிக்கிறது. மத்திய அரசு  தமிழகத்திற்கு ஓரவஞ்சனை செய்து வருகிறது. மீண்டும் மாநில மொழிகளில் தேர்வு நடத்த வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தியும், கண்டனம் தெரிவித்தும் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.அமைச்சர் ஜெயக்குமார்: பகுதி 1 தேர்வானது 100 மதிப்பெண்களுக்கானது ஆங்கிலம், இந்தியில் மட்டுமே நடத்தப்பட்டு உள்ளது. பகுதி 2ல் 50 மதிப்பெண்ணுக்கு நடத்தப்பட்ட தேர்வில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. தமிழ் மொழியிலும்  கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. தேர்வை மாநில மொழியில் நடத்த மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தும்.சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன்: உறுப்பினர்களின் ஒருமித்த கருத்தை தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும் என்று தான் எங்கள் உறுப்பினர் வலியுறுத்தினார்.

அமைச்சர் ஜெயக்குமார்: திமுகவில் 37 எம்பிக்கள் உள்ளனர். எங்கள் எம்பிக்களும் உள்ளனர். நீங்களும் நாடாளுமன்றத்தில் குரல் கொடுங்கள். நாங்களும் குரல் கொடுக்கிறோம்.துரைமுருகன்: சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவர என்ன தயக்கம். தீர்மானம் கொண்டுவர வேண்டியது தானே?. ( துரை முருகன் பேசி முடித்ததும் சபாநாயகர் அடுத்த அலுவலுக்கு சென்று  விட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும்  வகையில் திமுக உறுப்பினர்கள்  அனைவரும் எழுந்து நின்று கோஷம் எழுப்பினர். உறுப்பினரின் கேள்விக்கு பதில்  சொல்லாமல் அடுத்த அலுவலுக்கு எப்படி செல்லலாம் என்றும் அவர்கள் எழுந்து  நின்று வலியுறுத்தினர். இதனால், அவையில்  கூச்சல் குழப்பம் ஏற்பட்டது)சபாநாயகர்  தனபால்: அரசு சார்பில் அமைச்சர்கள் விளக்கம் கொடுத்து விட்டார்கள்.  அவையில் பிரச்னை தொடர்பாக வற்புறுத்துவது உங்கள் உரிமை. ஆனால், நான் வேறு  நிகழ்வுக்கு சென்று விட்டேன்.துரைமுருகன்: நமக்குள்ள அழுத்தம், அதாவது நம்முடைய வெறுப்பை காட்டும் வகையில் ஒரு தீர்மானத்தை கொண்டுவர வேண்டும். ஏன் கொண்டுவர மாட்டீர்கள்.
துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்:  தபால் துறை தேர்வு தொடர்பாக நாடாளுமன்ற மாநிலங்களவையில் நாளை(இன்று) அதிமுக எம்பிக்கள் குரல் எழுப்ப உள்ளனர். துரைமுருகன்: தபால் துறை தேர்வு விவகாரம் தொடர்பாக நம்முடைய சட்டப்பேரவையில் என்ன செய்தோம் என்று தான் உறுப்பினர் கேட்டார்?முதல்வர் எடப்பாடி பழனிசாமி: வெளியே போகும் முடிவோடு வந்திருக்கிறீர்கள். மத்திய அரசாங்கத்திலே வாதாடக் கூடிய ஒரு வாய்ப்பை நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மக்கள் தந்திருக்கின்றார்கள். அங்கே வாதாடுவதிலே  என்ன தவறு. நீங்கள் ஒரு காலத்திலே சொன்னீர்கள், 37 பேர் இருந்து என்ன சாதித்தீர்கள் என்று எங்களை கேட்டீர்கள். நீங்கள் 37 பேர் வெற்றி பெற்று மக்கள் உங்களை அனுப்பி இருக்கிறார்கள்.   நீங்கள் எப்படி உணர்வுபூர்வமாக இதை  அணுகுகின்றீர்களோ, அதே உணர்வுபூர்வமாக நாங்களும் அணுகுகின்றோம்.

துரைமுருகன்: வெளியே போகும் முடிவோடு வந்திருக்கிறீர்கள்’’ என்று எங்களது உணர்வுகளை கொச்சைப்படுத்தும் வகையில் முதல்வரின் பேச்சு உள்ளது. இதை கண்டிக்கும் வகையில், திமுக உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு  செய்கிறோம். (இதைத்தொடர்ந்து அனைவரும் வெளிநடப்பு செய்தனர்)முதல்வர்: எங்களை பொறுத்தவரைக்கும், அவர்களுக்கு என்ன உணர்வு இருக்கின்றதோ, அதேபோல 100 மடங்கு உணர்வு எங்கள் பகுதியிலே இருக்கின்றது. ஆகவே, தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்ற விதத்திலே நாடாளுமன்றத்திலே,  எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரல் எழுப்புவார்கள். இரு அவைகளிலும் குரல் எழுப்புவார்கள். இதற்கு ஒரு முடிவு கட்டுகின்ற வரை எங்களுடைய அரசு தொடர்ந்து போராடும். இவ்வாறு விவாதம் நடந்தது. இதைத் தொடர்ந்து  தபால் துறை தேர்வில் தமிழ் புறக்கணிக்கப்பட்டதாக கூறி காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

‘இந்தி திணிப்பை தமிழக அரசு ஏற்கிறதா?’
சட்டசபையில் வெளிநடப்புக்கு பின்னர் காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் கே.ஆர்.ராமசாமி நிருபர்களிடம் கூறுகையில், ‘அஞ்சல் துறையில் நடந்த தேர்வில் இதுவரை அந்தந்த பிராந்திய மொழிகளில் தேர்வு எழுதலாம் என்று இருந்தது. ஆனால்  திடீரென மத்திய அரசு இந்தியிலும், ஆங்கிலத்திலும் தான் தேர்வு எழுத வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பியது. இந்த சுற்றறிக்கையை தமிழக அரசு என்ன செய்யப் போகிறது என்று கேட்டோம். இந்தியில் தேர்வு எழுத வேண்டும்  என்பதற்கு எதிராக தீர்மானம் போட வேண்டும் என்று வற்புறுத்தினோம். அதை இந்த அரசு ஏற்கவில்லை. ’ என்றார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சட்டமன்ற உறுப்பினர் அபுபக்கர் கூறுகையில், மத்திய அரசின் இந்தி திணிப்பு என்பது தொடர்ந்து நடக்கிறது. சமீபத்தில் ரயில்வே துறை போன்று தற்போது தபால் துறையிலும் இந்தி, ஆங்கிலத்தில் தேர்வு எழுத  வேண்டும் என்று சுற்றரிக்கை அனுப்பியுள்ளனர். இந்த விவகாரத்தில் எல்லா கட்சிகளும் ஒரே நிலைப்பாட்டில் தான் உள்ளோம். அதனால் தான் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று சொன்னோம். வரும் 20ம் தேதியுடன் சட்டசபை  முடிகிறது. அதன் பிறகு சட்டசபை கூட்ட வாய்ப்பில்லை. எனவே தீர்மானத்தை உடனே நிறைவேற்ற வேண்டும் என்று கூறினோம். ஆனால் அதை ஏற்கவில்லை. எனவே, மத்திய அரசின் இந்தி திணிப்பை இந்த அரசு ஏற்கிறதோ என்ற  ஐயப்பாடு உள்ளது’ என்றார்.


Tags : Tamil,postal exam, DMK - AIADMK , DMK', CM's speech
× RELATED தமிழகத்தில் ரூ.4 கோடியில் மரபணு...