×

திமுக ஆட்சிக்காலத்தில் மேம்பாலங்கள் கட்டியதை நாங்கள் மறுக்கவில்லை: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேச்சு

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது சைதாப்பேட்டை மா.சுப்பிரமணியன்(திமுக) பேசும்போது,“திமுக எப்போது எல்லாம் ஆட்சிக்கு வந்திருக்கிறதோ? அப்போது மட்டுமே மேம்பாலங்களும், சுரங்கபாதைகளும் கட்டப்பட்டது” என்றார்.
இதற்கு பதில் அளித்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசுகையில், “ உறுப்பினர் பேசும் போது அவர்களுடைய ஆட்சி காலத்தில் பல்வேறு பாலங்கள் கட்டப்பட்டதை பதிய வைத்தார். அவர்களுடைய ஆட்சி காலத்தில் மேம்பாலங்கள் கட்டியதை  நாங்கள் மறுக்கவில்லை. 1998ம் ஆண்டில் எதிர்க்கட்சி தலைவர் மேயராக இருந்த போது, உயர்மட்ட குழுவினால் 13 மேம்பாலங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, 9 மேம்பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டன. அதற்கு பிறகு அதிமுக ஆட்சி காலத்தில்  அதிகமான மேம்பாலங்கள் தமிழகம் முழுவதும் கட்டி முடிக்கப்பட்டுள்ளது” என்றார்.

8 கோயில்களில் ₹4.58 கோடி மதிப்பீட்டில்திருப்பணி செய்யப்படும்இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வெளியிட்ட அறிவிப்புகள்:
* இந்து சமய அறநிலையத்துறை கோயில்களின் கட்டுப்பாட்டில் உள்ள 8 கோயில்களில் ₹4 கோடியே 58 லட்சத்து 50 ஆயிரம் செலவில் திருப்பணி செய்யப்படும்.
* கோயில்களில் உள்ள குளங்கள் ₹70 லட்சம் செலவில் தூர்வாரி செப்பனிடப்படும். 7 கோயில்களில் புதிய தேர், சப்பரங்கள் 1  கோடியே 76 லட்சம் செலவில் செய்யப்படும். தேர் பாதுகாப்புக்காக பத்தீஸ்வரர் கோயில்களில் ₹64 லட்சம் மதிப்பில்  பாதுகாப்பு கொட்டகை அமைக்கப்படும்.
* இந்து சமய அறநிலையத்துறை கீழ் உள்ள 3 கோயில்களில் 1 கோடியே 53 லட்சத்து 69 ஆயிரம் மதிப்பில் வணிகவளாகம் கட்டப்படும். கோயில்களில் பணிபுரியும் அர்ச்சர்களுக்காக ₹61 லட்சத்து 27 ஆயிரம் மதிப்பில் குடியிருப்புகள் கட்டப்படும்.  இந்து அறைநிலையத்துறை நிர்வாகம் செய்யும் 2 கல்லூரி, பள்ளிகளில் 7 கோடியே 18 லட்சத்து 84 ஆயிரம் மதிப்பில் மேம்பாட்டு பணி நடைபெறும்.

ஏரிகள் தூர்வாரப்படுவதைதொகுதி எம்எல்ஏவுக்குதெரிவிக்க வேண்டும். நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை, பொதுப்பணித்துறை ஆகிய மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் கே.என்.நேரு (திமுக) பேசியதாவது: கடந்த ஆண்டு காவிரி ஆற்றில் வெள்ளம் வந்தபோது, சுமார் 100 டி.எம்.சி. தண்ணீர்  கடலில் போய் கலந்தது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி: உங்கள் ஆட்சியிலும் உபரி தண்ணீர் கடலில் போய் கலந்தது. இருப்பினும் உபரி நீரை தேக்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

கே.என்.நேரு:  யார் யாரெல்லாம் குடிமராமத்து பணி உறுப்பினர்களாக இருக்கிறார்கள் என்பதே தெரியவில்லை.
முதல்வர்: குடிமராமத்து திட்டத்தினை கண்காணித்து செயல்படுத்த அரசு கூடுதல் செயலாளர் ஐ.ஏ.எஸ். அதிகாரி பாலாஜி சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். 5 ஓய்வு பெற்ற பொறியாளர்களை கொண்டு கண்காணிப்பு பணிகள் நடந்து  வருகிறது.
துரைமுருகன்: எங்கெங்கு ஏரிகள் இருக்கிறது, எவற்றை தூர்வார வேண்டும் என்பது எம்.எல்.ஏக்களுக்கு தான் தெரியும்.
முதல்வர்: முழுக்க முழுக்க விவசாயிகளை பயன்படுத்தி இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
துரைமுருகன்: நானும் விவசாயி தான். எம்எல்ஏக்களுக்கு இதுபோன்ற திட்டம் நடைபெறும்போது தெரியப்படுத்துங்கள்.
முதல்வர்: இனி தூர்வாரும் ஏரி விவரங்கள் குறித்து அந்தந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்படும்.

சட்டப்பேரவையில் இன்று...
சட்டப்பேரவை இன்று காலை 10 மணிக்கு கூடியதும், கேள்வி-நேரம் எடுத்துக்கொள்ளப்படும். இதைத்தொடர்ந்து நேரம் இல்லா நேரத்தில் எதிர்க்கட்சிகள் முக்கிய பிரச்னைகள் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து விவாதம்  நடத்துவார்கள். இதைத்தொடர்ந்து மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை ஆகிய மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறும். விவாதம் முடிந்ததும், இறுதியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பதில் அளித்து  துறை சார்பில் முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார். அதைத்தொடர்ந்து, பிற்பகல் 4.30 மணிக்கு போக்குவரத்து துறை, இயக்கூர்திகள் குறித்த சட்டங்கள்-நிர்வாகம் ஆகிய மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெறும். விவாதத்துக்கு  போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பதில் அளித்து துறை சார்ந்த அறிவிப்புகளை வெளியிடுவார்.

Tags : During ,DMK regime, Build bridges, Minister ,SP Velumani
× RELATED தமிழகத்தில் ரூ.4 கோடியில் மரபணு...