×

ஐ.எஸ். அமைப்புக்கு நிதி திரட்டி அனுப்பிய விவகாரம் தமிழகத்தை சேர்ந்த 14 பேர் அதிரடி கைது

* அரபு குடியரசில் இருந்து வெளியேற்றம்; டெல்லியில் சுற்றிவளைப்பு
* நடவடிக்கை தொடரும் என என்.ஐ.ஏ. அதிகாரிகள் தகவல்

சென்னை: ஐ.எஸ். அமைப்புகளுடன் தொடர்பை ஏற்படுத்தி கொண்டு இந்தியாவில் பயங்கர தாக்குதல் நடத்த திட்டம் தீட்டிய விவகாரத்தில், ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து டெல்லி வந்த தமிழகத்தை சேர்ந்த 14 பேரை தேசிய  புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அதிரடியாக ேநற்று கைது செய்தனர். 14 பேரும் தீவிரவாத பயிற்சி பெற்றவர்கள் என்ற அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.இலங்கையில் கடந்த ஈஸ்டர் தினத்தன்று தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்களில் தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது. இதில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதையடுத்து குண்டு  வெடிப்பு சம்பவங்களில் தொடர்புடைய தீவிரவாதிகளை இலங்கை ராணுவத்தினர் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் கேரளா மற்றும் தமிழகத்தை சேர்ந்த சிலருக்கு நேரடி தொடர்பு இருந்தது தெரியவந்தது. இது குறித்து  இலங்கை அரசு குண்டு வெடிப்பில் தொடர்புடைய நபர்கள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அறிக்கையை அளித்தது. அதைதொடர்ந்து தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது, கேரளா மற்றும் தமிழகத்தில்  நாகை, சென்னை, மதுரையில் உள்ள சிலருக்கு நேரடி தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதற்கிடையே இலங்கை தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தின்போது போலி பாஸ்போர்ட் மூலம் சென்னைக்கு வந்த இலங்கையை சேர்ந்த சுரேந்திரன்(39), அரிகரன்(33), நிஷாத்தன்(35) ஆகிய 3 பேரை க்யூ பிரிவு போலீசார் கடந்த மே 12ம் தேதி  கைது செய்து தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.அதைதொடர்ந்து கொச்சியில் உள்ள தேசிய புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் இருந்து கடந்த 13ம் தேதி இரண்டு குழுக்களாக 10 பேர் கொண்ட அதிகாரிகள் சென்னை மற்றும் நாகைக்கு வந்தனர். சென்னையில் மண்ணடி லிங்கி செட்டி தெருவில்  இயங்கி வந்த இஸ்லாமிய அலுவலகம் மற்றும் வேப்பேரியில் உள்ள இந்த அமைப்பின் மற்றொரு அலுவலகம் மற்றும் புரசைவாக்கத்தில் உள்ள அந்த அமைப்பின் தலைவர் சையது புகாரிக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றிலும்  அதிரடி சோதனை நடத்தினர்.அதேபோல், நாகை அருகே உள்ள சிக்கலை சேர்ந்தவர் அசன் அலி. இவரது உறவினரும் நாகை மஞ்சக்கொல்லையை சேர்ந்த ஆரிஷ் முகமது ஆகியோரின் வீடுகளிலும் சோதனை நடத்தினர். அதில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியானது. இந்த  சோதனையில், சென்னையை சேர்ந்த சையது புகாரி மற்றும் நாகையை சேர்ந்த அசன் அலி, ஆரிஷ் முகமது ஆகியோர் அமீரகத்தில் ‘அன்சுருல்லா’ என்ற புதிய அமைப்பு ஒன்றை உருவாக்கி இந்தியாவில் இஸ்லாமிய ஆதரவு ஆட்சியை  ஏற்படுத்தவும், அதற்காக நாடு முழுவதும் பயங்கரவாத தாக்குதலை நடத்த உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் நிதி திரட்டியதும், தீவிரவாத தாக்குதலுக்காக தமிழகத்தில் இருந்து பலரை வெளிநாடுகளுக்கு அனுப்பியதற்கான முக்கிய  ஆவணங்களை தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைப்பற்றினர். ஏற்கனவே ‘அன்சுருல்லா’ அமைப்பு இந்தியாவில் தடை ெசய்யப்பட்ட இயக்கம் தான்.

இதையடுத்து சையது புகாரி, அசன் அலி, ஆரிஷ் முகமது ஆகிய 3 பேர் மீதும்நாட்டுக்கு எதிராக சதி திட்டம் தீட்டியது உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். வழக்கில் இரண்டு மற்றும் மூன்றாவது குற்றவாளியான அசன் அலி, ஆரிஷ் முகமது ஆகியோரை மட்டும் அதிகாரிகள் நேற்று  முன்தினம் சிறப்பு நீதிமன்ற நீதிபதி செந்தூர் பாண்டியன் முன்பு ஆஜர்படுத்தி வரும் 25ம் தேதி வரை நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைத்தனர்.இந்த வழக்கில் முதன்மை குற்றவாளியாக கருதப்படும் சையது புகாரியை தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் ரகசிய இடத்தில் வைத்து தொடர்ந்து விசாரணை நடத்தினர். அப்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கப்பட்ட ‘அன்சுருல்லா’  அமைப்பு மூலம் தமிழகத்தில் இருந்த தீவிரவாத பயிற்சி பெற பலர் சிரியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும், அங்கு தீவிரவாத இயக்கங்களுடன் நேரடி தொடர்பில் இருந்ததால் ‘அன்சுருல்லா’ என்ற இயக்கம் அந்த நாட்டு அரசால் தடை  செய்யப்பட்டது. இதனால் சிரியாவில் பயிற்சி பெற்று ஐக்கிய அரபு அமீரகத்தில் தங்கியிருந்த மதுரையை சேர்ந்த முகமது ஷேக் மொஹ்தீன், திருவாரூரை சேர்ந்த அகமது அசாருதீன், சென்னையை சேர்ந்த தொஹபீக் அகமது, தேனியை சேர்ந்த முகமது அக்சர்,  கீழக்கரையை சேர்ந்த மொய்தீன் சீனி சாகுல் அமீது, நாகப்பட்டணத்தை சேர்ந்த முகமது இப்ராகிம், தேனியை ேசர்ந்த மீரான் கனி, பெரம்பலூரை சேர்ந்த குலாம் நபி ஆசாத், ராமநாதபுரத்தை சேர்ந்த ரபி அகமது, முன்தாப்சீர், தஞ்சையை சேர்ந்த  உமர் பரூக், வழிநோக்கம் பகுதியை சேர்ந்த பரூக், ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த பைசல் ஷெரிப், திருநெல்வேலியை சேர்ந்த முகமது இப்ராகிம் ஆகிய 14 பேரையும் அந்த நாட்டில் இருந்து அதிரடியாக வெளியாற்றப்பட்டனர். அவர்கள்  அனைவரும் விமான மூலம் நேற்று முன்தினம் இரவு டெல்லி சர்வதேச விமான நிலையத்துக்கு வருவதாக விசாரணையில் தெரியவந்தது.

அதை தொடர்ந்து சென்னையில் இருந்து தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் உடனே டெல்லியில் உள்ள தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகளை தொடர்பு கொண்டு சம்பவம் குறித்து தகவல் அளித்தனர். அதன்படி ஐக்கிய அரபு அமீரகத்தில்  இருந்து டெல்லி வந்த 14 பேரையும் அதிரடியாக விமான நிலையத்தில், நாட்டுக்கு எதிராக சதி திட்டம் தீட்டியதாக வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட 14 பேரும் தீவிரவாத பயிற்சி பெற்றவர்கள் என்பதால் அதிகாரிகள் தனி விமானம் மூலம் நேற்று பிற்பகல் சென்னைக்கு அழைத்து வந்தனர். பின்னர் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் 14 பேரையும் தேசிய புலனாய்வு  பிரிவு அதிகாரிகள் நேற்று மாலை 4.30 மணிக்கு பூந்தமல்லியில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி செந்தூர் பாண்டியன் முன்பு ஆஜர்படுத்தினர். அப்போது, தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கைது  செய்யப்பட்ட 14  பேரும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவரும் தீவிரவாதிகளுக்கு நிதி திரட்டியதாக குற்றம்சாட்டினார். அதைதொடர்ந்து நீதிபதி செந்தூர் பாண்டியன் 14 பேரையும் வரும் 25ம் தேதி வரை  நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்படி தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் மாலை 6.30 மணிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 14 பேரையும் புழல் சிறையில் அடைத்தனர். ஓரிரு நாளில் 16 பேரையும் 5 நாள்  காவலில் எடுத்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்பட்டுள்ளது. அதற்கான பணிகளையும் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள சையது புகாரி தொடர்ந்து விசாரணையில் உள்ளதால் மேலும் பலர் கைது ெசய்யப்படுவார்கள் என்று தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாளில் தமிழகத்தில் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தீவிரவாத அமைப்புடன் நேரடி தொடர்பில் இருந்து 16 பேரை கைது செய்து இருப்பது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : PCs. A fundraiser, organization, 14 arrested ,Tamil Nadu
× RELATED பண்டல், பண்டலாக கஞ்சா பறிமுதல்: 4 பேர் கைது