ஆயுள் தண்டனை பெற்ற சரவணபவன் ராஜகோபாலுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை கோரி மகன் வழக்கு: மருத்துவ ஆவணங்களை தாக்கல் செய்ய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தனியார் மருத்துவமனையில் தனது தந்தைக்கு சிகிச்சை வழங்ககோரி சரவணபவன் ராஜகோபாலின் மகன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் அரசு மருத்துவமனையில் அவருக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்த  ஆவணங்களைத் தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. கடந்த 2001ம் ஆண்டு ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை செய்யப்பட்ட வழக்கில் சரவணபவன் ஓட்டல் உரிமையாளர் ராஜகோபாலுக்கு சென்னை செஷன்ஸ் நீதிமன்றம் 10 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. பின்னர்  இந்த தண்டனையை உயர்நீதிமன்றம் ஆயுள் தண்டனையாக அதிகரித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்யது. இதையடுத்து, உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஜூலை 7ம் தேதிக்குள் ராஜகோபால் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம்  உத்தரவிட்டது.  நீதிமன்ற உத்தரவின்படி கடந்த 9ம் தேதி சென்னை 4வது  செஷன்ஸ் நீதிமன்றத்தில் சாரணடைந்த ராஜகோபாலை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பின்னர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் ராஜகோபால் அனுமதிக்கப்பட்டார்.  இந்நிலையில் ராஐகோபாலின் மகன் சரவணன், உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், 72 வயதாகும் தனது தந்தை ராஜகோபாலை தனியார் மருத்துவமனையில் அனுமதித்து ஏற்கனவே வழங்கப்பட்ட சிகிச்சைகளை வழங்க உத்தரவிட வேண்டும். சர்க்கரை நோயினால் சிறுநீரகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால்   தந்தைக்கு  தினமும் 4 முறை இன்சுலின் செலுத்த வேண்டும். இரண்டு கால்களும் பாதிக்கப்பட்டுள்ளதால் இரண்டு உதவியாளர்கள் இல்லாமல் நடக்க முடியாது. நாள்பட்ட சிறுநீரக நோயினால் கண்பார்வையும் பாதிக்கப்பட்டுள்ளது.  கடந்த சில வருடங்களாக தனியார் மருத்துவர்கள் வழங்கிய மருந்துகளையே எடுத்து வந்த அவர் தற்போது, அரசு மருத்துவமனையில் ஒவ்வொரு மருத்துவர்களும் வழங்கும் மருந்துகளை உட்கொள்வதால் உடல்நிலை மேலும் மோசமடைய  வாய்ப்பு உள்ளது.  எனவே, அனைத்து மருத்துவ உபகரணங்களும், வசதிகளும் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ராஜகோபாலை சிகிச்சைக்காக மாற்ற வேண்டும் என்று கோரியுள்ளார். இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், நிர்மல் குமார் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், மனுதாரரின் தந்தைக்கு உரிய சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலையில்  நல்ல முன்னேற்றம் காணப்படுவதாக தெரிவித்தார்.  வழக்கை விசாரித்த நீதிபதிகள், அரசு மருத்துவமனையில் ராஜகோபாலுக்கு என்னென்ன சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன என்பது தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று அரசு தரப்புக்கு உத்தரவிட்டனர். வழக்கு இன்று  மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.

Related Stories: