நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உள்துறை செயலாளர், டிஜிபி நேரில் ஆஜராக தடை: சென்னை ஐகோர்ட் அமர்வு உத்தரவு

சென்னை: ஆயுதப்படை போலீசார் பணி வரன்முறை விவகாரம் தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உள்துறை செயலாளர், டிஜிபி ஆஜராக வேண்டும் என்று தனி நீதிபதி உத்தரவுக்கு உயர் நீதிமன்ற அமர்வு தடை விதித்து  உத்தரவிட்டுள்ளது. தமிழக காவல்துறையில் கடந்த 2011ம் ஆண்டில் போலீஸ் தேர்வு நடந்தது. இதில்  தேர்வு செய்யப்பட்டவர்களை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து தமிழக டி.ஜி.பி., 2013ல் உத்தரவிட்டார். இதையடுத்து, அவர்கள் அனைவரும் 2013ம் ஆண்டு  தமிழக காவல்துறையில் பணியில் சேர்ந்தவர்களாக கருதப்படுவார்கள் என்று தமிழக அரசு உத்தரவிட்டது.  இந்த உத்தரவை எதிர்த்து ராஜ்குமார் உள்ளிட்ட 168 போலீசார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி டி.ராஜா, தேர்வு செய்யப்பட்ட 168 போலீஸ்காரர்களையும்  2011ம் ஆண்டில் இருந்து  பணிவரன்முறை செய்து அதற்கான பணபலன்களை 6 வாரத்தில் வழங்க வேண்டும் என்று கடந்த ஆண்டு உத்தரவிட்டார்.

 தனி நீதிபதியின் இந்த உத்தரவை தமிழக அரசு அமல்படுத்தாததால் தமிழக அரசு மீது 168 பேரும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.ராஜா தமிழக உள்துறைச் செயலாளர், டி.ஜி.பி., ஆகியோர்  ஜூலை 17ம் தேதி (நாளை) நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.இந்நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து உள்துறை செயலாளர் மற்றும் டிஜிபி ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இந்த வழக்கு நீதிபதிகள்  எம்.எம்.சுந்தரேஷ், எம்.நிர்மல்குமார் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உள்துறை செயலாளர் மற்றும் டிஜிபி நேரில் ஆஜராக வேண்டும் என்று தனி நீதிபதியின்  உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.

Related Stories: