மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

சென்னை: திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நேற்று நடந்தது. இதில் வேலூர் மக்களவை தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது. வேலூர் மக்களவை ெதாகுதிக்கான தேர்தல் அடுத்த மாதம் 5ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் திமுக சார்பில் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார். தேர்தலில் திமுக சார்பில் பணியாற்றிட நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளர்கள்,  தொகுதிக்கு உட்பட்ட ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தேர்தல் பணிப்பொறுப்பாளர்கள் திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தங்கள் தேர்தல் பணியை முடுக்கி விட்டுள்ளனர்.இந்த நிலையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை தேனாம்பேட்டை அன்பகத்தில் உள்ள அண்ணா மன்றத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். கூட்டத்தில் திமுக  பொருளாளர் துரைமுருகன், திமுக துணை பொதுச் செயலாளர்கள் வி.பி.துரைசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன், ஐ.பெரியசாமி உள்ளிட்ட திமுக முன்னணியினர் மற்றும் அனைத்து மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் வருகிற 5ம் தேதி நடைபெற உள்ள வேலூர் மக்களவை தேர்தல் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.தமிழகத்தில் நடந்த மக்களவை தேர்தலில் 37 மக்களவை தொகுதியில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது போல, வேலூர் மக்களவை தேர்தலிலும் சிறப்பாக பணியாற்றி வெற்றி பெற வேண்டும். மத்தியிலும், மாநிலத்திலும் உள்ள  ஆட்சியாளர்கள் வேலூர் மக்களவை தேர்தலில் வெற்றி பெற பல்வேறு செயல்களில் ஈடுபடுவார்கள். அதை எல்லாம் எவ்வாறு முறியடிக்க வேண்டும். தேர்தல் பிரசாரத்தில் திமுகவின் செயல்பாடு எப்படி இருக்க வேண்டும். வாக்காளர்களை  எவ்வாறு சந்தித்து வாக்குகளை திரட்ட வேண்டும் என்பது குறித்து முக்கிய ஆலோசனைகளை மு.க.ஸ்டாலின் அப்போது அவர்களுக்கு வழங்கியதாக கூறப்படுகிறது.அது மட்டுமல்லாமல் வேலூர் மக்களவை தேர்தலில் மு.க.ஸ்டாலின் தீவிர பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். அது தொடர்பாகவும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

Related Stories: