×

என்ஐஏ திருத்த மசோதா மூலம் போலீஸ் அதிகாரத்தை மத்திய அரசு பறிக்கிறது: முத்தரசன் அறிக்கை

சென்னை: தேசியப் புலனாய்வு முகமை திருத்த மசோதாவின் மூலம் மாநில காவல்துறை அதிகாரத்தை மத்திய அரசு பறிக்கும் வகையில் உள்ளது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தேசியப் புலனாய்வு முகமை திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படுகிறது. அது விசாரிக்கத்தக்க குற்றங்களின் பட்டியலில் பின்வரும் குற்றங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. ஆள் கடத்தல், கள்ள நோட்டுகளை விநியோகித்தல்  முதலானவை இதில் சேர்க்கப்பட்டுள்ளன. இது எப்படி பயங்கரவாதக் குற்றங்களாகும்? ஆயுதம் தயாரிப்பது, வெடிமருந்து சட்டத்தின் கீழான குற்றங்கள் முதலானவை ஏற்கனவே மாநில அரசின் விசாரணை வரம்புக்குள் உள்ளன. இந்த சட்டத் திருத்தத்தின்மூலம் தற்போது மாநிலப்  பட்டியலில் இருக்கும் சட்டம் ஒழுங்கு அதிகாரத்தை அரசியல் சாசனத்துக்கு எதிராக மத்திய அரசு தன் கையில் எடுத்துக்கொள்ள முயற்சிக்கிறது. இப்போது என்ஐஏ வரம்பு விரிவுபடுத்தப்பட்டு மாநிலங்களின் உரிமையில் கை வைப்பது கண்டனதுக்குரியது. இன்னும் கொஞ்ச காலத்தில் அடிதடி, திருட்டு வழக்குகளைக்கூட இந்த அமைப்புத்தான் விசாரிக்கும் என்று சொல்லவும் வாய்ப்பு  உண்டு.

சி.பி.ஐ. போன்ற மத்திய புலனாய்வு அமைப்புகள் ஒரு வழக்கை விசாரிக்க வேண்டுமென்றால் அதற்கு மாநில அரசின் சம்மதத்தை பெற்றாக வேண்டும். மாநில அரசு சம்மதிக்காவிட்டால், சி.பி.ஐ. எந்த வழக்கையும் தலையிட்டு விசாரிக்க  முடியாது. ஆனால் இந்தச் சட்டமோ மாநில அரசை வெறும் தபால்காரர் போல் மாற்றிவிட்டது. இந்தச் சட்டத்தின்கீழ் அமைக்கப்படும் சிறப்பு நீதிமன்றம் முற்றிலும் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது. சிறப்பு நீதிமன்றத்துக்கான நீதிபதிகள் நியமிப்பது, அந்த நீதிமன்றத்துக்கான அரசு வழக்கறிஞர்களை நியமிப்பது  அனைத்துமே மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் மட்டுமே இருக்கும். இந்த சிறப்பு நீதிமன்றம் சொல்லும் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவேண்டுமென்றால் உயர்நீதிமன்றத்தில் இரண்டு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச்சுக்குதான் செல்ல வேண்டும். இது கூட்டாட்சி தத்துவத்திற்கும், அரசியல் சாசனத்திற்கும்  எதிரானது. எனவே தமிழ்நாட்டில் உள்ள அனைத்து முற்போக்கு மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் இதனை எதிர்த்து போராடி முறியடிக்க வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


Tags : NIA Amendment ,Bill,police, Mutharasan
× RELATED வீடியோ காலில் ஆபாசங்களை காட்டி...