எச்.ஐ.வி பாதித்த மாணவனுக்கு அரசு பள்ளியில் இடமில்லை பள்ளி கல்வி இயக்குனர் விளக்கம் அளிக்க மனித உரிமை ஆணையம் உத்தரவு

சென்னை: எச்.ஐ.வி. பாதித்த மாணவனை அரசு பள்ளியில் சேர்க்க மறுத்த விவகாரம் தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குனர், பெரம்பலூர் மாவட்ட  ஆட்சியர், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி நான்கு வாரங்களில் விளக்கம் அளிக்க,  மாநில  மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவன் ஒருவர் எச்.ஐ.வி-யால் பாதிப்படைந்துள்ளார். இவர் பெரம்பலூர் மாவட்டம்,  ஆலத்தூர் அரசு பள்ளியில் 8ம் வகுப்பு வரை படித்து வந்தார். இந்தநிலையில் அவரது தாய் இறந்து போக ஊரை விட்டு  வேறு ஊருக்கு சென்றுள்ளார். பின்னர் சில ஆண்டுகள் கழித்து ஊருக்கு திரும்பிய மாணவன், மீண்டும் ஆலத்தூர் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு சேருவதற்காக  தலைமை ஆசிரியரிடம் கேட்டுள்ளார். அதற்கு தலைமை ஆசிரியர் பள்ளிக்கு  வருமாறு கூறியுள்ளார்.

மாணவனுக்கு எச்.ஐ.வி பாதிப்பு இருப்பதை அறிந்து கொண்ட தலைமை ஆசிரியர், சில நாட்கள் கழித்து பள்ளிக்கு வர வேண்டாம் என்று கூறி நிறுத்தியுள்ளார். இது குறித்து அறிந்த மாணவனின் உறவினர்கள் பள்ளிக்கு சென்று கேட்டபோது.  பள்ளியில் அனுமதிக்க முடியாது என்று மிரட்டியுள்ளனர். இதனையடுத்து இந்த விவகாரம் போலீஸ் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி வரை சென்றுள்ளது. இருந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், பள்ளியிலும் மாணவனை அனுமதிக்காமல்  உள்ளனர். இது தொடர்பான செய்தி பத்திரிக்கையில் வெளியாகியிருந்தது. இதனை பார்த்து, தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி துரை ஜெயசந்திரன், இந்த விவகாரம் தொடர்பாக நான்கு வாரங்களில் விளக்கமளிக்க பள்ளிக்கல்வி இயக்குனர், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஆகியோருக்கு  உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: