மத்திய அரசு இந்தியாவை உடைக்க நினைக்கிறது: வைகோ ஆவேசம்

சென்னை: மத்திய அரசு இந்தியாவை உடைக்க நினைப்பதாக அவதூறு வழக்கில் ஆஜராக வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆவேசமாக கூறினார்.அவதூறு வழக்கு ஒன்றில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்னை  சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகினார். வழக்கு நீதிபதி கருணாநிதி முன்பு விசாரணைக்கு வந்தது.  வழக்கை விசாரித்த நீதிபதி குற்றச்சாட்டு பதிவிற்காக, வரும் 17ம்  தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வைகோ கூறியதாவது.வழக்கு விசாரணை 17ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேச துரோக வழக்கில், மேல்முறையீட்டுக்கு செல்ல மாட்டேன் என நான் கூறவில்லை. ஆயுள் தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக்கொள்வேன் என்றுதான் சொன்னேனே தவிர மேல்முறையீட்டுக்கு செல்ல மாட்டேன் என கூறவில்லை.

இனப்படுகொலை செய்த எந்தப் பாவியும் தப்பிக்க முடியாது. ராஜபக்சே நிச்சயம் தப்பிக்க முடியாது. நிச்சயம் தண்டனை கிடைக்கும். தபால் துறையில் தமிழில் தேர்வு எழுத முடியாது என்பது தமிழக மாணவர்கள் தபால் துறையில் பணிக்குச் செல்ல முடியாத நிலையை உருவாக்கும்.இந்தியாவை எப்படியாவது உடைக்க வேண்டும் என மத்திய சர்க்கார் நினைத்து உள்ளது. இதற்கும் சேர்த்து வழக்கு போட்டாலும் சந்திக்க தயாராக உள்ளேன். இவ்வாறு வைகோ கூறினார்.

Related Stories: