×

கர்நாடகா சட்டப்பேரவையில் 18ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு

* குமாரசாமிக்கு சபாநாயகர் அனுமதி
* வியாழன் வரை அவை ஒத்திவைப்பு
பெங்களூரு: கர்நாடக முதல்வர் குமாரசாமியின் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் வியாழக்கிழமை காலை 11 மணிக்கு எடுத்துக் கொள்ளப்படும் என சபாநாயகர் ரமேஷ்குமார் அறிவித்தார். இதைத் தொடர்ந்து வியாழக்கிழமை வரை அவை ஒத்தி வைக்கப்பட்டது. கர்நாடக மாநிலத்தில் மஜத-காங்கிரஸ் கூட்டணியில் அதிருப்தி எம்எல்ஏக்கள் 14 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். மேலும், 2 சுயேச்சை எம்எல்ஏக்களும் தங்களின் ஆதரவை வாபஸ் பெற்றனர். இதனால் மாநிலத்தில் அரசியல் நிலையற்ற தன்மை ஏற்பட்டது. கூட்டணி அரசு பெரும்பான்மை இழந்த நிலையில் முதல்வர் குமாரசாமி பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா வலியுறுத்தினார். இதற்கிடையே, கடந்த 12ம் தேதி பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் பெங்களூரு விதான சவுதாவில் தொடங்கியது.முதல் நாளில் இரங்கல் தீர்மானம் மட்டும் எடுத்துக் கொள்ளப்பட்டது. இரங்கல் தீர்மானத்தில் முதல்வர் குமாரசாமி பேசுகையில், ‘‘பெரும்பான்மை பலம் இருக்கிறதா, இல்லையா என்பது தெரியாமல் பதவியில் நீடிக்க விரும்பவில்லை’’ என கூறினார்.அத்துடன் நம்பிக்கை தீர்மானம் கொண்டு வர விரும்புவதாகவும் கூறினார். இதைத்தொடர்ந்து கடந்த சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களும் ஆளுங்கட்சி சார்பில் அதிருப்தி எம்எல்ஏக்களின் மனதை மாற்றும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அமைச்சர் எம்டிபி நாகராஜ் சமாதானம் அடைந்ததாக கூறப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் விமானத்தில் மும்பைக்கு பறந்து அதிருப்தி எம்எல்ஏக்களுடன் இணைந்தார்.

இதுபோன்ற பரபரப்பான சூழ்நிலையில் நேற்று பகல் 12.30 மணிக்கு அவை கூடும் என அறிவிக்கப்பட்டாலும் மிகவும் தாமதமாக பிற்பகல் 2.25 மணிக்குதான் கூட்டம் தொடங்கியது.இதைத்தொடர்ந்து சபாநாயகர் ரமேஷ்குமார், ‘‘முதல்வர் குமாரசாமியின் நம்பிக்கை தீர்மானம் நாளை மறுநாள்  வியாழக்கிழமை காலை 11 மணிக்கு எடுத்துக் கொள்ளப்படும்; அது வரை அவையும் ஒத்தி வைக்கப்படுகிறது’’ என்று அறிவித்தார். முன்னதாக பேரவையில் சபாநாயகர் ரமேஷ்குமார் கூறுகையில், ‘‘நம்பிக்கை தீர்மானத்தை பாஜவினர் இன்றே (நேற்று) எடுத்துக் கொள்ள வேண்டும் என்று பேரவை அலுவல் கூட்டத்தில் கோரினர். ஆனால், வியாழக்கிழமை காலை 11 மணிக்கு முதல் அலுவலாக முதல்வர் குமாரசாமிக்கு நம்பிக்கை தீர்மானம் தாக்கல் செய்வதற்கு அனுமதி அளிக்கலாம் என முடிவு செய்யப்பட்டது. எதிர்க்கட்சி தலைவர்கள் இதற்கு சம்மதித்தாலும் அதுவரை அவையில் பங்கேற்க மாட்டோம் என உறுதிபட கூறினர். இதனால் வியாழக்கிழமை வரை அவை ஒத்தி வைக்கப்படுகிறது’’ என்றார்.அவை ஒத்தி வைக்கப்பட்ட உடனே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மட்டும் இன்றி காங்கிரஸ், மஜத உறுப்பினர்களும் தனித்தனி சொகுசு பேருந்தில் ரிசார்ட்டுகளுக்கு புறப்பட்டுச் சென்றனர்.

மேஜிக் நம்பர் 106
கர்நாடக பேரவையின் இப்போதைய நிலையில் உறுப்பினர்களின் எண்ணிக்கை 207 மட்டுமே. இதனால் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை பலம் 106 ஆக குறைந்துள்ளது. பாஜவின் பலம் 107 ஆக உயர்ந்துள்ளதால் அக்கட்சி பெரும்பான்மையை பெற்றுள்ளது. 16 எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதம் இன்னும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. வருகிற 18ம்தேதி ஆளுங்கட்சிக்கு அதிருப்தி எம்எல்ஏக்கள் வாக்களிக்கவில்லை என்றால் ஆட்சி தானாகவே கவிழ்ந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

எடியூரப்பா நம்பிக்கை
பெங்களூரு விதான சவுதாவில் எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா நிருபர்களிடம் கூறியதாவது: காங்., மஜத கூட்டணி ஆட்சியின் இறுதிக்காலம் 18ம் தேதி வரை மட்டும்தான். கூட்டணி ஆட்சி நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறாது. 100 சதவீதம் நாங்களே வெற்றி பெறுவோம். பாஜ  எம்எல்ஏக்கள் அனைவரும் அந்த நேரத்திற்காக கட்டுக்கோப்புடன் காத்திருக்க வேண்டும். கட்சியின் கவுரவத்தை அனைவரும் பாதுகாக்கவேண்டும் என்றார்.

Tags : Karnataka,Legislative Assembly ,voting ,March 18
× RELATED பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் ஆம்ஆத்மி...