இமாச்சல் ஆளுநராக கல்ராஜ் மிஸ்‌ரா நியமனம்: ஆச்சார்யா தேவ்ரத் குஜராத்துக்கு மாற்றம்

புதுடெல்லி: இமாச்சல் பிரதேசத்தின் புதிய ஆளுநராக முன்னாள் அமைச்சர் கல்ராஜ் மிஸ்‌ரா நியமிக்கப்பட்டுள்ளார். அங்கு ஆளுநராக இருந்த ஆச்சார்யா தேவ்ரத் குஜராத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.கல்ராஜ் மிஸ்ரா கடந்த 2014ம் ஆண்டு உபியில் தியோரியா தொகுதியில் இருந்து எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பகுஜன் சமாஜ் வேட்பாளர் நியாஜ் அகமதுவை விட ஏறக்குறைய 2.60 லட்சம் வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார். கடந்த 1978-84, 2001-06, 2006-12 ஆகிய கால கட்டங்களில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். 2014ம் ஆண்டு முதல் மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சராக இருந்த மிஸ்‌ரா, 75 வயது நிரம்பியதால் 2017ல் பதவி விலகினார். கடந்த 2018 ஆகஸ்ட் வரை பாதுகாப்பு நிலைக் குழுவில் உறுப்பினராக பணியாற்றினார். இந்நிலையில் அவரை இமாச்சல் ஆளுநராக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நியமித்துள்ளார்.

கடந்த 2015 ஆகஸ்டில் இமாச்சல் ஆளுநராக நியமிக்கப்பட்ட ஆச்சார்யா தேவ்ரத் அங்கிருந்து குஜராத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ராம்நாத் கோவிந்த், பீகார் ஆளுநராக நியமிக்கப்பட்டபோது ஆச்சார்யாவும் இமாச்சல் ஆளுநராக நியமிக்கப்பட்டார். இவர் மாநிலத்தில் போதை ஒழிப்புக்கான உறுதியான நடவடிக்கை எடுத்தவர் என்ற பெயர் பெற்றவர். இவர்கள் இருவரும் பொறுப்பேற்கும் காலத்தில் இருந்து பதவிக்காலம் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: