தமிழகத்தில் கடும் தண்ணீர் பஞ்சம்: கண்டலேறு அணையிலிருந்து நீர் பெற ஆந்திர முதல்வரை சந்திப்பாரா முதல்வர் பழனிசாமி?

சென்னை: கண்டலேறு அணையில் இருந்து முதல் தவணை காலத்தில் தர வேண்டிய 8 டிஎம்சி நீர் பெற ஆந்திர முதல்வரை நேரில் சந்தித்து தமிழக முதல்வர் கோரிக்கை வைப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. தெலுங்கு கங்கா திட்டத்தின்  கீழ் ஆந்திராவில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசுக்கு 12 டிஎம்சி நீர் தர வேண்டும். கடந்த ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சியும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சி நீர் தர வேண்டும். ஆனால், ஆந்திரா அரசு தவணை  காலத்தில் முழுமையான நீர் தந்ததில்லை. இந்த நிலையில் கடந்தாண்டு தவணைகாலத்தில் 1.9 டிஎம்சி நீர் மட்டுமே ஆந்திரா தந்துள்ளது. இந்த நிலையில் நடப்பாண்டு முதல் தவணை காலம் கடந்த ஜூலை 1ம் தேதி தொடங்கியது. இந்த  தவணை காலத்தில் 8 டிஎம்சி நீர் ஆந்திரா தர வேண்டும். இதை தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக பொதுப்பணித்துறை சார்பில் ஆந்திர நீர்வளத்துறை தலைமை பொறியாளருக்கு கடிதம் எழுதியது.

ஆனால், அந்த கடிதத்திற்கு ஆந்திரா சார்பில் எந்த பதிலும் அளிக்கவில்லை. இந்த நிலையில் ஆந்திராவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்தது. இதன் காரணமாக, ஆந்திராவில் உள்ள அணைகளின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து  வருகிறது. இதற்கிடையே சென்னை மாநகருக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகள் முற்றிலும் வறண்டு போய்விட்டது. இதனால், ஏரிகளில் இருந்து சென்னை மாநகரின் குடிநீர்  தேவைக்கு தண்ணீர் திறந்து விட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் தினமும் சென்னை மாநகரில் 220 மில்லியன் லிட்டர் மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது 650 மில்லியின் லிட்டர் தேவைப்படும் நிலையில், இது, போதுமானதாக இல்லை என்று கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில் கண்டலேறு அணையில் இருந்து முதல் தவணை காலத்தில் 8 டிஎம்சி நீர் தர வேண்டும். அந்த நீரை பெறும்  வகையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி சந்தித்து கோரிக்கை வைக்கும் பட்சத்தில் தண்ணீர் கிடைக்க வாய்ப்புள்ளது. கடந்த 2016ல் தமிழக முதல்வராக இருந்த ஓ.பன்னீர் செல்வம் ஆந்திர  முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்து தண்ணீர் திறக்க கோரிக்கை வைத்தார். அதன்பேரில் 2 டிஎம்சி நீர் ஆந்திர அரசு திறந்து விட்டது. அதே போன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆந்திர முதல்வரை சந்தித்து கோரிக்கை  வைக்கும் பட்சத்தில் தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்க வாய்ப்புள்ளது என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஓருவர் தெரிவித்தார்.

Related Stories: