ரயில் படிக்கட்டுகளில் ஆபத்தான பயணம்: பாதுகாப்பு படையினர் விழிப்பது எப்போது?

வேலூர்: மத்திய அரசின் ரயில்வே துறைக்கென தனி பாதுகாப்பு சட்டங்கள் உள்ளன. உயர் அழுத்த மின்சாரம் செல்லும் பாதையின் கீழே உள்ள தண்டவாளத்தை கடக்கக்கூடாது, ஓடும் ரயில்களில் ஏறவோ, இறங்கவோ கூடாது, படிக்கட்டுகளில் நின்றபடி அல்லது கைப்பிடிகளை பிடித்து தொங்கியபடி பயணம் செய்யக்கூடாது, ரயில் நிலையத்திற்குள் வந்து செல்வதற்கான டிக்கெட் இல்லாமல் உள்நுழையக்கூடாது, டிக்கெட் எடுக்காமல் ரயிலில் பயணிக்கக்கூடாது, சாதாரண டிக்கெட் எடுக்கும் பயணிகள் முன்பதிவு மற்றும் பெண்கள் பெட்டியில் பயணிக்கக்கூடாது, சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் வகையில் அசுத்தம் செய்யக்கூடாது என்பது உள்ளிட்ட சட்ட விதிகள் உள்ளன. இந்த விதிகளை மீறும் பயணிகள் மீது இந்திய ரயில்வே தண்டனை சட்டத்தின் கீழ் அபராதம் அல்லது சிறைத்தண்டனை அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படுகிறது. குற்றச்செயல்களுக்கு ஏற்ப ₹300 முதல் ₹2 ஆயிரம் வரை அபராதம் வசூலிக்கப்படுகிறது.

சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் விரைவு மின்சார ரயிலில் தொங்கியபடி பயணித்த இளைஞர்கள் சிலர் பிளாட்பாரத்தில் இறுதியில் இருந்த சுவற்றில் மோதி கீழே விழுந்தனர். இதில், 4 பேர் பரிதாபமாக இறந்தனர். ரயில் படிக்கட்டுகளில் நின்றபடி பயணிக்கும் பொதுமக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி, சென்னை கோட்டத்திற்கு உட்பட்ட ரயில் நிலையங்களில் ஓடும் ரயில்களின் படிக்கட்டுகளில் பயணம் செய்யும் பொதுமக்களை பாதுகாப்பு படையினர் பிடித்து அபராதம் வசூலித்தனர். இந்நிலையில், விதிகளை மீறி ரயில் படிக்கட்டுகளில் பயணிப்பதால் உயிரிழப்பு சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘ஓடும் ரயில்களின் படிக்கட்டுகளில் பயணம் செய்யக்கூடாது என்கிற பாதுகாப்பு விதியை பொதுமக்கள் கடைபிடிப்பதில்லை. வேகமாக செல்லும் ரயில்களின் படிக்கட்டுகளில் நின்று பயணிக்கும் பொதுமக்கள் தவறிகீழே விழுந்து இறக்கின்றனர். விதிமீறல்களை கண்டித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய ரயில்வே பாதுகாப்பு படையினர் கன்டும் காணாமல் மெத்தனமாக செயல்படுகின்றனர். எனவே, ரயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் விதிகளை மீறி ரயில் படிக்கட்டுகளில் பயணம் செய்வதை தடுக்கும் நடவடிக்கைகளை ரயில்வே பாதுகாப்பு படையினர் மேற்கொள்ள வேண்டும்’ என்றனர்.

Related Stories: