×

நாகர்கோவிலில் நோ பார்க்கிங் பகுதிகளில் பைக், கார்களை நிறுத்தினால் கடும் நடவடிக்கை: போக்குவரத்து போலீஸ் எச்சரிக்கை

நாகர்கோவில்: நாகர்கோவில் மாநகரில் நோ பார்க்கிங் பகுதியில் வாகனங்களை நிறுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர். நாகர்கோவில் மாநகர பகுதியில் காலை, மாலை வேளையில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. மேலும் நோ - பார்க்கிங் பகுதியில் வாகனங்களை நிறுத்துவதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மாநகரின் முக்கிய பகுதிகளான வடசேரி அசம்பு ரோடு, பாலமோர் ரோடு, கேப் ரோடு, கே.பி. ரோடுகளில் சாலையின் வலது மற்றும் இடது புறங்களில்  பைக், கார்கள், ஆட்டோக்கள் நிறுத்தப்படுவதால், மற்ற வாகனங்கள் செல்ல முடிய வில்லை.

மணிமேடை, மீனாட்சிபுரம், கோட்டார், வேப்பமூடு, கோர்ட் ரோடு, செட்டிக்குளம், ராமன்புதூர், ஈத்தாமொழி விலக்கு பகுதிகளில் உள்ள வர்த்தக நிறுவனங்கள் மற்றும் கடைகளுக்கு வருபவர்களும் சாலையில் இடையூறாக வாகனங்களை நிறுத்துகிறார்கள். காவல்துறை பலமுறை எச்சரித்தாலும் இவர்கள் கேட்பதில்லை. இந்த நிலையில் நோ-பார்க்கிங் பகுதியில் வாகனங்களை நிறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.  இது குறித்து நாகர்கோவில் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு போலீசார் விடுத்துள்ள செய்தி குறிப்பில் நாகர்கோவில் மாநகரில் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக சாலைகளிலும், நடைபாதைகளிலும், பஸ் நிலையங்களுக்கு உட்புற பகுதியிலும் (வடசேரி கிறிஸ்டோபர் பேருந்து நிலையம், மீனாட்சிபுரம் அண்ணா பேருந்து நிலையம்) இரு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்களை நிறுத்துகின்றனர். இதனால் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. எனவே இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் பார்க்கிங் பகுதி என குறிப்பிடப்பட்ட இடத்தில் தான், வாகனங்களை நிறுத்த வேண்டும். மீறும் பட்சத்தில் காவல்துறை சார்பில் வாகனங்கள் பறிமுதல் மற்றும் லாக்கிங் செய்யப்பட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டு உள்ளது.

Tags : In Nagercoil, No Parking, Traffic, Police, Warning
× RELATED போராடும் பெண்களை ஒடுக்குவதற்காக...