அறிவியல் ஆய்வகங்கள் அமைக்க மத்திய அரசு அனுமதி: தமிழகத்தில் ஆயிரம் பள்ளிகளில் அமையவுள்ளது...அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

விருதுநகர்: அடுத்த கல்வியாண்டில் 25 லட்சம் மாணவர்களுக்கு ‘டேப்’ வழங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். விருதுநகரில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில், நாடார் மகாஜன சங்கம் சார்பில் முன்னாள் முதல்வர்  காமராஜரின் 117வது பிறந்த நாள் விழா, கல்வித் திருவிழாவாக நேற்று கொண்டாடப்பட்டது. இதில், அமைச்சர்கள் செங்கோட்டையன், ராஜேந்திரபாலாஜி மற்றும் தளவாய்சுந்தரம், சாத்தூர் எம்எல்ஏ ராஜவர்மன், திருவில்லிபுத்தூர் எம்எல்ஏ  சந்திரபிரபா முத்தையா ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில்,‘‘புதிய கல்வித் திட்டத்தை கொண்டு வருவதற்கு தமிழக அரசு தயாராக உள்ளது. இதன் ஒருபகுதியாக பிளஸ்  1, பிளஸ் 2 மாணவர்களுக்கு, படிக்கும்போதே லேப்டாப் வழங்கி வருகிறோம்.

2017 மற்றும் 2018ல் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு இன்னும் 3 மாதத்தில் லேப்டாப் வழங்கப்படும். 9, 10, 11ம் வகுப்பு மாணவர்களின் வகுப்பறைகள் செப்டம்பருக்குள் கணினிமயமாக்கப்படும். 6 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும்  மாணவர்களின் 7,500 வகுப்பறைகளை ‘ஸ்மார்ட் கிளாஸ்’ ஆக மாற்றும் திட்டமும் செப்டம்பரில் செயல்படுத்தப்படும்.நாடு முழுவதும் 7 ஆயிரம் பள்ளிகளுக்கு தலா ரூ.20 லட்சத்தில் ‘அட்டர் டிக்கர்’ எனப்படும் அறிவியல் ஆய்வகங்கள் அமைக்க,  மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இத்திட்டம் மூலம் தமிழகத்தில் ஆயிரம் பள்ளிகளில் ஆய்வகங்கள் அமைய உள்ளன. மாணவர்கள் பள்ளியில் படிக்கும்போதே சரளமாக ஆங்கிலம் பேசவும், வேலை தேடி பிறமாநிலங்கள், நாடுகளுக்கு  செல்லும்போது சரளமாக ஆங்கிலத்தில் பேசவும், 2 ஆயிரம் ஆங்கில வார்த்தைகளை தேர்வு செய்து, அவை செயலி மூலம் ஆன்லைனில் பதிவேற்றும் பணி நடந்து வருகிறது.

மேலும், அடுத்த கல்வியாண்டில் மலேசிய நிறுவனத்துடன் இணைந்து, 25 லட்சம் மாணவர்களுக்கு ‘டேப்’ வழங்கப்படும். இதன்மூலம் அடுத்த 2 ஆண்டுகளில் கல்வி சார்ந்த பாடங்களை படிக்கவும், அதற்கடுத்த 10 ஆண்டுகளில் கல்வி சார்ந்த  ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்படும்’’என்றார்.

Related Stories: