அறந்தாங்கி அருகே 78 வாரிசுகளுடன் 106வது பிறந்தநாளை கொண்டாடிய விவசாயி

அறந்தாங்கி: அறந்தாங்கி அருகே 106வது பிறந்தநாளை விவசாயி ஒருவர் மகன்கள், மகள்கள், பேரக்குழந்தைகளுடன் கொண்டாடினார். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த பெருமருதூரை சேர்ந்தவர் விவசாயி கருப்பையா. இவரது மனைவி செல்லம்மாள். இவர்களுக்கு காளிமுத்து, ரெத்தினம், நாராயணசாமி, கோவிந்தசாமி என்ற 4 மகன்களும், பத்மாவதி, சிவயோகம், பிரேமாவதி ஆகிய 3 மகள்களும் உள்ளனர். இவர்களில் காளிமுத்து, பத்மாவதி ஆகியோர் இறந்துவிட்டனர். கருப்பையாவின் மகன்கள், மகள்கள், பேரக்குழந்தைகள், கொள்ளுப்பேரக் குழந்தைகள் என சுமார் 78க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர்.

ஆரம்பத்தில் பூர்வீக கடை இருந்ததால், கருப்பையா வீட்டாரை அந்த ஊரைச் சேர்ந்தவர்கள் கடைக்காரர் வீடு என்றே அழைக்கின்றனர். பின்னர், கருப்பையா விவசாயத்தில் அதிக கவனம் செலுத்தினார். இந்நிலையில், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கருப்பையாவின் மனைவி செல்லம்மாள் இறந்துவிட்டார். அதன்பிறகு கருப்பையா, தனது 2வது மகன் ரெத்தினத்தின் வீட்டிலேயே உள்ளார். கடந்த 1914ம் ஆண்டு ஜூலை 14ம் தேதி பிறந்த கருப்பையாவிற்கு நேற்று அவரது குடும்பத்தினர் 106வது பிறந்தநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். இதற்காக சென்னை, தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மகன்கள் கோவிந்தசாமி மற்றும் நாராயணசாமி ஆகியோர் தங்கள் குடும்பத் தினருடன், நேற்று பெருமருதூருக்கு வந்தனர். பின்னர், அங்கு கருப்பையா, கேக் வெட்டி தனது 106வது பிறந்தநாளை கொண்டாடினார். 106வயது ஆனபோதிலும், கருப்பையா சொந்த வேலைகளுக்கு நடந்தே செல்கிறார். அடுத்தவர் சொல்வதை புரிந்து கொண்டு பதில் அளிக்கிறார்.

கருப்பையா கூறியதாவது: வானம் பார்த்த பூமியான எங்கள் பகுதியில் அப்போது அதிக அளவு மழை பெய்ததால், விவசாயம் செழித்தது. ஆனால், தற்போது மழையை பார்ப்பதே அபூர்வமாக உள்ளது. நான் ஆரம்பத்தில் இருந்தே சரியான நேரத்திற்கு தேவையான உணவை எடுத்துக் கொள்வேன். எனது குடும்பத்தினர் என்னை நல்ல முறையில் கவனித்து வருகின்றனர். எனது 100வது பிறந்தநாளையும் எனது வாரிசுகள் கொண்டாடினர் என்றார்.

Related Stories: