பரங்கிப்பேட்டையில் 3வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை: மீன்பிடி துறைமுகம் வெறிச்சோடியது

புவனகிரி: சுருக்கு மடி வலைகள் பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து, பரங்கிப்பேட்டையில் மீனவர்கள் 3வது நாளாக கடலுக்கு செல்ல வில்லை. இதனால் மீன்பிடி துறைமுகம் வெறிச்சோடி காணப்படுகிறது. கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அன்னங்கோயிலில் சிறிய மீன்பிடி துறைமுகம் உள்ளது. இங்கிருந்து சின்னூர், புதுப்பேட்டை, புதுக்குப்பம், சாமியார்பேட்டை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்குச் சென்று மீன்பிடித்து வருவர். அன்னங்கோயில் மீன் இறங்கு தளத்தில் மொத்த வியாபாரிகள் மீன்களை வாங்கிச் செல்வர்.  இந்த கிராம மக்கள் சுருக்கு மடி வலைவீசி மீன் பிடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

ஆனால் வியாபாரிகள் இரண்டு தரப்பினரின் மீன்களையும் மொத்த விலைக்கு வாங்கி வந்தனர். இந்நிலையில் சுருக்கு மடி வலையில் பிடிக்கும்  மீன்களை வியாபாரிகள் வாங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சுருக்கு மடி வலைகளை பயன்படுத்தக் கூடாது என்பதை வலியுறுத்தியும் கடந்த 2 தினங்களாக இப்பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை. இன்று 3வது நாளாக மீனவர்களின் வேலை நிறுத்தம் தொடர்கிறது. இதனால், அன்னங்கோயில் மீன் பிடி துறைமுகத்தில் ஏராளமான படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் மீன் பிடிக்க யாரும் செல்லாததால் மீன் வாங்க வருவதில்லை. இதனால் பரபரப்பாக காணப்படும் இந்த பரங்கிப்பேட்டை அன்னங்கோயில் மீன் இறங்கு தளம் வெறிச்சோடி காணப்படுகிறது. மீனவர்களிடையே பிரச்னை ஏற்படாமல் தடுக்க அன்னங்கோயில் மீன் இறங்கு தளத்தில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

Related Stories: