வாகனங்கள் சென்றுவர திணறுவதால் கோவில்பட்டி நகராட்சி மார்க்கெட் நுழைவுவாயில் விரிவாக்கம் செய்யப்படுமா?

கோவில்பட்டி: கோவில்பட்டி நகரின் மையப்பகுதியில் நகராட்சி தினசரி மார்க்கெட் இயங்கி வருகிறது. இம்மார்க்கெட்டில் காய்கறி, பழவகைகள் மற்றும் மளிகைகடை, வாழைத்தார், தேங்காய், வாலைஇலை, அரிசிகடை என மொத்தம் மற்றும் சில்லரை என 500க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. தூத்துக்குடி, மதுரை, மேட்டுபாளையம், சங்கரன்கோவில், ஓட்டன்சத்திரம் போன்ற பல்வேறு இடங்களில் காய்கறி வகைகள், மளிகை பொருட்கள் லாரி மற்றும் வேன்கள் மூலம் இம்மார்க்கெட்டிற்கு மொத்தமாக கொண்டு வரப்படுகிறது. கோவில்பட்டி நகரம் மட்டுமின்றி நகரை சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிராம மக்களும் இம்மார்க்கெட்டிற்கு வந்து அத்தியாவசிய பொருட்களை வாங்கி செல்கின்றனர். இதனால் தினமும் காலை முதல் இரவு வரை மக்கள் கூட்டம் அதிகமாககாணப்படுகிறது. மேலும் மார்க்கெட்டில் இருந்து ஆட்டோ, இருசக்கர வாகனங்களிலும் மக்கள் பொருட்களை வாங்கி செல்கின்றனர். இந்நிலையில் இம்மார்க்கெட்டின் தென்பகுதியில் பிரதான நுழைவு வாசல் உள்ளது. இந்த நுழைவு வாசலில் உள்ள ஆர்ச் மிகவும் உயரம் மற்றும் அகலம் குறைவானதாக உள்ளது. இதனால் வாகனங்கள் எதிரெதிரே கடக்கும் போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

நுழைவு வாசலின் உயரம் குறைவாக இருப்பதால், லோடு ஏற்றி வரும் லாரிகளை மார்க்கெட்டிற்குள் கொண்டு செல்லவும், வெளியில் வரவும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதான நுழைவு வாசலில் உள்ள ஆர்ச்சை உயரம் மற்றும் அகலமாக விரிவாக்கம் செய்யக்கோரி மார்க்கெட் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் நகராட்சி அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் நகராட்சி அதிகாரிகள், மார்க்கெட் பிரதான நுழைவு வாசலில் புதியதாக ஆர்ச் அமைப்பதற்காக சர்வே எடுத்து சென்றனர். ஆனால் இதுவரையில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நுழைவு வாசலில் முன்புற சாலையானது குண்டும், குழியுமாக உள்ளதால் வாகனங்கள் சிரமத்துடன் செல்கின்றன. மழை காலங்களில் இந்த சாலையில் தண்ணீர் தேங்கி நிற்கும். எனவே கோவில்பட்டி நகராட்சி தினசரி மார்க்கெட் தென்பகுதியில் உள்ள பிரதான நுழைவு வாசலில் உள்ள ஆர்ச்சியின் உயரம் மற்றும் அகலத்தை விரிவாக்கம் செய்து புதிய ஆர்ச் அமைக்க வேண்டும் மற்றும் நுழைவு வாசல் முன்புற குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Stories: