சரவணபவன் ராஜகோபால் வழக்கு: தற்போதைய சிகிச்சை விவரங்கள் குறித்து விளக்கமளிக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சரவணபவன் ராஜகோபாலை தனியார் மருத்துவமனையில் சேர்க்க அனுமதிக்கக்கோரி தொடர்ந்த வழக்கில், அவருக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து விளக்கமளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால், ஜீவஜோதி கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வருகிறார். முன்னதாக, உயர்நீதிமன்றம் தனக்கு அளித்த தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அப்போது அவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. மேலும், ராஜகோபால் கடந்த ஜூன் 7-ம் தேதிக்குள் கோர்ட்டில் சரண் அடைய வேண்டும் என்று  உத்தரவிட்டிருந்தது. ஆனால், தனக்கு நரம்பு தளர்ச்சி நோய் இருப்பதாக கூறி சரண் அடைவதில் இருந்து விலக்கு கேட்டு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், ராஜகோபால் உடனடியாக சரண் அடைய வேண்டும் என உத்தரவிட்டது. உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து கடந்த 9-ம் தேதி உயர்நீதிமன்ற நீதிபதியின் முன்பு அவர் ஆஜரானார். உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்ததால் தனியார் மருத்துவமனையில் இருந்து நீதிமன்றத்திற்கு ஆம்புலன்ஸ் மூலமாக வந்தார். நீதிபதி அவரை புழல் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். சிறைக்கு செல்லும் போதே அவருடைய உடல்நிலை பாதிக்கபட்டிருந்தது. அதனால், ஸ்டான்லி மருத்துவமனையில் சிறை கைதிகளுக்கான வார்டில் ராஜகோபால் அனுமதிப்பட்டார்.

உடல்நிலை மோசமானதால் தீவிர சிகிச்சை பிரிவிற்கு அவர் மாற்றப்பட்டு மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 13ம் தேதி இரவு 11 மணியளவில் அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் அவரது உடல் நிலை மிகவும் மோசமானது. உடனடியாக வெண்ட்டிலேட்டர் இயந்திரம் மூலம் செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டது. மேலும் அவரது உடல் மருத்துவ இயந்திரங்கள் உதவியுடன் இயங்கி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இரவு 3 மணிக்கு மேல் உடல்நிலை சற்று முன்னேற்றம் அடைந்ததாக அவருடைய உறவினர் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

வெண்டிட்லேட்டரில் இருந்து வெளியே வந்தால் மட்டுமே ராஜகோபாலின் உடல் நிலை குறித்து முழுமையான நிலை தெரியவரும் என ஸ்டான்லி மருத்துவமனையின் மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் ராகோபாலை தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க அனுமதிக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிரருந்தது. இந்த மனு இன்று நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எம்.நிர்மல்குமார் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது, ராஜகோபாலின் உடல் நல குறைபாடுகள் மற்றும் வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து ஸ்டான்லி மருத்துவமனையில் தகவல்களைப் பெற்று விளக்கமளிக்க அரசுத்தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை நாளைக்கு தள்ளிவைத்தது.

Related Stories: