தமிழகத்தில் அனுமதியளிக்கப்பட்ட 7 இடங்களில் 2-ல் மட்டுமே ஹைட்ரோகார்பன் திட்டம் செயல்படுகிறது: அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கம்

புதுடெல்லி: ஷேல்வாயு திட்டம் எதுவும் தமிழகத்தில் செயல்படுத்தப்படவில்லை என மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் மக்களவையில் தெரிவித்திருக்கிறார். திமுக எம்.பி.,கனிமொழி, மற்றும் காங்கிரஸ் எம்.பி.திருநாவுக்கரசரின் கேள்விக்கு மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் இவ்வாறு பதிலளித்துள்ளார். தமிழகத்தில், ஷேல்வாயு மற்றும் மீத்தேன் எடுக்கும் திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறதா? அவ்வாறு அனுமதி வழங்கப்பட்டிருந்தால் அதற்கு மக்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டிருக்கிட்டதா? என்று மக்களவையில் எம்.பி.க்கள் கனிமொழி, மற்றும் திருநாவுக்கரசர் ஆகியோர் கேள்வி எழுப்பியுள்ளனர். குறிப்பாக காவிரி டெல்டா பகுதிகளை பொறுத்தவரை ஹைட்ரோகார்பன் ஆய்வு மற்றும் உற்பத்தி பணிகளுக்கு அனுமதி ஏதேனும் கொடுக்கப்பட்டுள்ளதா? என்றும், இவற்றால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து ஆய்வகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறதா? போன்ற பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

அதற்கு எழுத்துபூர்வமாக பெட்ரோலிய துறை தலைவர் தர்மேந்திர பிரதான் பதிலளித்துள்ளார். அதில் ஷேல்வாயு திட்டம், அல்லது மீத்தேன் திட்டம் தொடர்பான நடவடிக்கை எதுவும் தமிழகத்தில் நடைபெறவில்லை என தெரிவித்துள்ளார். அதேபோல ஹைட்ரோகார்பன் ஆய்வு மற்றும் உற்பத்தி திட்டங்கள், 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் நடைபெற்று வருவதாகவும், இதனால் சுற்றுசூழலுக்கோ, விவசாயத்திற்கோ எந்த விதமான பாதகமான விளைவுகளும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். அதேபோல, தமிழகத்தில் மொத்தம் 7 இடங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 2 மட்டுமே தற்போது இயக்கத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாது, டிஸ்கவர்டு ஸ்மால் சீடு என்கிற திட்டத்தின் கீழ் 2 இடங்களுக்கு இந்த ஹைட்ரோகார்பன் ஆய்வு மற்றும் உற்பத்திக்கான உரிமம் வழங்கப்பட்டதாகவும், அதற்கு சம்பந்தப்பட்ட மாநில அரசிடம் இருந்து இதுவரை ஒப்புதல் கிடைக்கவில்லை என்றும் எழுத்துபூர்வமாக அவர் தெரிவித்திருக்கிறார்.

Related Stories: