×

அரசு பள்ளிகளில் வழங்கப்படும் இலவசங்களில் முறைகேடு என வழக்கு: மனுதாரருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தது உச்சநீதிமன்றம்

புதுடெல்லி: தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் இலவசமாக வழங்கப்படும் புத்தகம் உள்ளிட்ட பொருட்களில் முறைகேடு நடப்பதாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மனுவில் முரண்பாடான தகவல்கள் இருப்பதாக கோபமடைந்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், மனுதாரருக்கு ரூ.1 லட்சம் அபராதம் வழங்கி உத்தரவிட்டுள்ளனர். நடப்பாண்டில் அனைத்து அரசு பள்ளிகளும் கடந்த ஜூன் மாதம் திறக்கப்பட்டது. அப்போது, அனைத்து அரசு பள்ளி மாணவர்களுக்கும் இலவசமாக புத்தகங்கள், சீருடை, ஆகியவை வழங்கப்பட்டன. அப்படி வழங்கப்பட்ட புத்தகம் உள்ளிட்ட இலவச பொருட்களில் முறைகேடு நடந்திருப்பதாக கே.கே.ரமேஷ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனு மீதான விசாரணை இன்று தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரான கே.கே.ரமேஷ் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் அரசு பள்ளிகளில் இலவச பொருட்கள் மீது முறைகேடு நடந்திருப்பதாக தனது வாதங்களை முன்வைத்தார்.

ஆனால், மனுவில் சில முரண்பாடான தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருந்ததால் கோபமடைந்த நீதிபதிகள், மனுதாரருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டனர். நீதிபதிகளின் இந்த அதிரடி உத்தரவால் உச்சநீதிமன்றத்தில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது. கே.கே.ரமேஷ் என்பவர்  கடந்த ஏப்ரல் மாதம், இதுபோன்று ஒரு வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்திருந்தார். அதில், கடந்த 2018-19ம் ஆண்டில் அரசு பள்ளிகளில் வழங்கப்பட்ட இலவச புத்தகம் உள்ளிட்ட பொருட்களில் முறைகேடு நடந்திருப்பதாக புகார் தெரிவித்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, இதனை பொதுநல வழக்காக தொடர முடியாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.

Tags : Government schools, free, abuse, prosecution, Supreme Court, petitioner, fine
× RELATED வரலாற்றிலேயே முதன்முறையாக உள்ளங்கை...