பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங்கிற்கு கடிதம் அனுப்பி முறைப்படி ராஜினாமா செய்தார் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து

சண்டிகர்: முறைப்படி அமைச்சர் பதவியை பாஞ்சாப் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நவ்ஜோத் சிங் சித்து ராஜினாமா செய்துள்ளார்.  நவ்ஜோத் சிங் சித்து தனது ராஜினாமா கடிதத்தை பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங்குக்கு அனுப்பி வைத்துள்ளார். பஞ்சாப் முதல்வர் அம்ரிந்தர் சிங்குடன் ஏற்பட்ட மோதல் காரணமாக முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். கடந்த 10ம் தேதியே தனது பதவியை ராஜினாமா செய்த சித்து அந்த கடிதத்தை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோருக்கு அனுப்பி வைத்தார்.

நேற்று, அந்த கடிதத்தின் நகலை, தனது டுவிட்டர் பக்கத்தில் சித்து வெளியிட்டு, தான் அமைச்சர் பதவியில் இருந்து விலகிவிட்டதாக கூறியிருந்தார். இந்த சம்பவம் பஞ்சாப் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் நவ்ஜோத் சிங் சித்து, பஞ்சாபில் கடந்த முறை சட்டசபை தேர்தல் நடப்பதற்கு முன்பாக காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இதன்பிறகு பஞ்சாபில் அம்ரீந்தர் சிங் தலைமையில் காங்கிரஸ் தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இதையடுத்து, பஞ்சாப் அமைச்சரவையில் சித்துவுக்கு உள்ளாட்சி துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

இந்நிலையில் அவர், கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பு மின்சாரத் துறை அமைச்சராக மாற்றப்பட்டார். ஆனால் இன்று வரை  மின்சாரத் துறை அமைச்சர் பதவியை அவர் ஏற்கவில்லை. அமைச்சர் பதவியில் இருந்து மாற்றப்பட்டதால் சித்து வேதனை அடைந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, பஞ்சாப் முதல்வர்  அம்ரீந்தர் சிங்குக்கும் நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் விரக்தி அடைந்த சித்து, தனது அமைச்சர் பதவியை ராஜினிமா செய்தார். மேலும் இன்று, முறைப்படி தனது பதவியிலிருந்து விலகியுள்ளார்.

Related Stories: