×

அடுத்த தலாய்லாமாவை நாங்களே முடிவு செய்வோம்; இந்தியா தலையிடக்கூடாது.. சீனா அறிவிப்பு

பீஜிங்: அடுத்த தலாய் லாமா சீனாவில் இருந்துதான் தேர்வு செய்யப்பட வேண்டும் என்றும் இந்த விவகாரத்தில் இந்தியா தலையிடக் கூடாது என்றும் சீனா அறிவித்துள்ளது. திபெத் புத்த மத தலைவராக தலாய் லாமா உள்ளார். 1959-ம் ஆண்டு இந்தியா வந்த இவர் இமாசல பிரதேச மாநிலம், தர்மசாலாவில் உள்ளார்.  இவருக்கு தற்போது 84 வயது ஆகும். 84 வயதை அடைந்துவிட்ட 14வது தலாய் லாமாவுக்கு மாற்றாக புதிய தலாய் லாமாவைத் தேர்வு செய்வதற்கான நடவடிக்கைகளை சீன அரசு மேற்கொண்டுள்ளது. திபெத் மீது சீனா ஆக்ரமிப்பு செய்த போது, 1959ம் ஆண்டு திபெத்தை விட்டு வெளியேறிய தலாய் லாமா, இந்தியாவில் அடைக்கலம் பெற்றார்.

இமாச்சலப் பிரதேசத்தில் தர்மசாலா எனுமிடத்தில் அவருக்கு இந்திய அரசு குடில் அமைத்தும் தந்தது. அவர் முதுமையடைந்து விட்டதால் புதிய தலாய் லாமா குறித்த ஆலோசனைகள் நடைபெறுகின்றன. இந்நிலையில் சீனா தேர்ந்தெடுக்கும் புதிய தலாய் லாமாவை இந்தியா அங்கீகரிக்காவிட்டால், இருநாடுகளின் உறவையும் அது பாதிக்கும் என்று சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தலாய் லாமாவின் மறு அவதாரம் என்பது மதம், அரசியல், வரலாறு சார்ந்த 200 ஆண்டு பழைமை வாய்ந்த மரபு என்றும், இதில் இந்தியா தலையிடக் கூடாது என்றும் சீனா வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக திபெத் துணை மந்திரி அந்தஸ்து வகிக்கிற சீன அதிகாரி வாங் நேங் ஷெங் கூறும்போது, “தலாய் லாமா நியமன விவகாரம், வரலாறு, மதம் மற்றும் அரசியல் ரீதியிலானது. அதற்கான வரலாற்று அமைப்புகள் உள்ளன. நடைமுறைகளும் உள்ளன. தலாய் லாமா யார் என்பதை எந்த தனிப்பட்ட நபரோ அல்லது வெளிநாடுகளில் உள்ள மக்களோ தீர்மானிக்க முடியாது” என கூறியுள்ளார். இதே போன்று சீனா, திபெத் ஆராய்ச்சி அமைப்பின் இயக்குனர் ஜா லுவோ கூறுகையில், “அடுத்த தலாய் லாமா யார் என்பது சீனாவுக்கு முக்கியமான பிரச்சினை. இதில் எந்த நட்பு நாடோ, சீனாவின் நண்பர்களோ தலையிட கூடாது” என குறிப்பிட்டார்.


Tags : Dalai Lama, India, China
× RELATED இன்று 5வது டெஸ்ட் தொடக்கம் தொடரை...