நாட்டு மக்கள் எப்படி நேரத்தை செலவிடுகின்றனர்?: கணக்கெடுக்கிறது மத்திய அரசு

லக்னோ: நாட்டு மக்கள் எப்படி தங்கள் நேரத்தை செலவிடுகின்றனர் என்ற கணக்கெடுப்பை மத்திய அரசு கடந்த ஜனவரி முதல் எடுத்து வருகிறது. தனிநபர்கள் ஒவ்வொருவரும் தங்கள் நேரத்தை எப்படி செலவிடுகின்றனர் என்ற கணக்கெடுப்பு, 1998-99ம் ஆண்டுகளில் அரியானா, மத்தியப் பிரதேசம், குஜராத், ஒடிசா, கேரளா மற்றும் மேகலாயாவில் எடுக்கப்பட்டது. இது போன்ற கணக்கெடுப்பு நாடு முழுவதும் கடந்த ஜனவரி மாதம் முதல் எடுக்கப்பட்டு வருகிறது. வரும் டிசம்பர் வரை 4 கட்டங்களாக இந்த கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இந்த கணக்கெடுப்பை மத்திய அரசின் புள்ளியல் துறை அமைச்சகம், தேசிய மாதிரி கணக்கெடுப்பு அலுவலகம் மற்றும் பான்-இந்தியா அமைப்புடன் சேர்ந்து நடத்துகிறது. இந்த கணக்கெடுப்பு குறித்து லக்னோ பல்கலைக் கழகத்தில் நடந்த ‘புள்ளியல் மற்றும் ஒருங்கிணைந்த வளர்ச்சி இலக்கு’ என்ற கருத்தரங்கில் பேசிய தலைமை புள்ளியல் நிபுணர் பிரவீன் வஸ்தவா கூறியதாவது:பணம் சம்பாதிப்பதற்காக மக்கள் செய்யும் பணிகள், பணம் பெறாமல் மக்கள் செய்யும் பணிகள் போன்றவை கணக்கெடுக்கப்படுகிறது. வர்த்தகம், தொழில்கள் போன்றவை எல்லாம் முதல் பிரிவில் வந்துவிடும். இவை பொருளாதாரம் சம்பந்தப்பட்டவை. வீட்டு வேலைகள், தானாக முன்வந்து செய்யும் பணிகள் எல்லாம் இரண்டாம் பிரிவில் வரும்.

தனிநபர்கள் ஒவ்வொருவரும் எப்படி நேரத்தை செலவிடுகின்றனர் என்பதை இந்த கணக்கெடுப்பு ஆராயும். தற்போது கூட்டு குடும்பமாக இல்லாமல், சிறு குடும்பங்களாக வசிப்பதுதான் அதிகம் என்பதால், சமையல், குழந்தைகளை வளர்ப்பது போன்ற வீட்டு வேலைகளில் கணவன், மனைவி இருவருமே அதிக நேரம் ஈடுபடுகின்றனர். ஆண்களின் வேலையில் பெண்களும் உதவுகின்றனர். இது போன்ற கணக்கெடுப்பு இதுரை எடுக்கப்பட்டதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: