பெருந்துறை அருகே போலி மதுபான ஆலை நடத்திய 7 பேர் அதிரடி கைது

ஈரோடு:  ஈரோடு  அருகே போலி மதுபான ஆலை நடத்தியது தொடர்பாக 7 பேர் கொண்ட கும்பலை நேற்று  முன்தினம் இரவு மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர்.  ஈரோடு மாவட்டம்  பெருந்துறை அருகே திருவாச்சி என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலையில் போலி  மதுபான ஆலை செயல்படுவதாக எஸ்.பி.சக்தி கணேசனுக்கு தகவல்  கிடைத்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று நடவடிக்கை எடுக்க ஈரோடு மதுவிலக்கு போலீசாருக்கு உத்தரவிட்டார்.  இதனடிப்படையில் நேற்று முன்தினம் மதுவிலக்கு போலீசார் திருவாச்சியில் உள்ள ஒரு அரிசி ஆலையில் சோதனை நடத்தினர். அப்போது போலீசாரை பார்த்தவுடன் அந்த கும்பல் தப்பியோட முயற்சி செய்தது. ஆனால் அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். மேலும் அரிசி ஆலை என்ற பெயரில் போலி மது ஆலை இயங்கி வந்தது தெரியவந்தது. இதன்பின், அங்கு எரிசாராயத்துடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி,  வாகனங்கள் மற்றும் போலி மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அவற்றை ஈரோடு  சோலாரில் உள்ள மதுவிலக்கு பிரிவு அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த மதுவிலக்கு போலீசார், கிருஷ்ணகிரியை  சேர்ந்த மாதேஸ்வரன் (43), சேலத்தை சேர்ந்த குமார் (29), அதே  பகுதியை சேர்ந்த வெங்கடாசலம் (29),  அர்த்தனாரி (29), ஈரோட்டை சேர்ந்த ராஜேஸ் (44), பவானியை சேர்ந்த சரவணகுமார் (31), திருவாச்சியை சேர்ந்த சம்பத் (45)  என 7 பேரை கைது செய்தனர். இவர்களில் சம்பத்  என்பவர் சில ஆண்டுக்கு முன்பு ரேஷன் அரிசியை கடத்தி வெளி  மாநிலங்களுக்கு விற்பனை செய்து வந்தவர் என்பதும், போலி மதுபான ஆலை சம்பத்  தலைமையில் நடத்தப்பட்டதும் தெரிய வந்தது. இவர்களிடமிருந்து 8 ஆயிரம் போலி  மதுபாட்டில்கள், மதுபானம் தயாரிக்க பயன்படுத்திய இயந்திரங்கள்,  ஸ்டிக்கர்கள், மூடிகள், காலி பாட்டில்கள் மற்றும் 4 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Related Stories: