முதல்வரின் நேர்முக உதவியாளர் எனக்கூறி மதுரை அரசு விருந்தினர் மாளிகையில் குடும்பத்துடன் தங்கிய வாலிபர் கைது

மதுரை: முதல்வரின் நேர்முக உதவியாளர் எனக்கூறி மதுரை உயர் அதிகாரிகளை நம்ப வைத்து மதுரையில் விருந்தினர் மாளிகையில் தங்கிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் கனியூர் திருவிக தெருவைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (36). இவர் நேற்றுமுன்தினம் மனைவி சரண்யா மற்றும் 2 குழந்தைகளுடன் மதுரை அழகர்கோவில் ரோட்டில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு வந்தார். தனது செல்போனில் இருந்து மதுரை டிஆர்ஓ மற்றும் ஆர்டிஓவிற்கு ‘முதல்வரின் நேர்முக உதவியாளர் ராஜசேகர்  பேசுகிறேன். மதுரையில் ஒரு திருமண விழாவிற்கு வந்துள்ளேன்’ எனக்கூறி அரசு  விருந்தினர் மாளிகைளில் ஒரு அறை ஒதுக்கி தருமாறு கூறியுள்ளார். உடனே அதிகாரிகளின் உத்தரவின்பேரில் 13ம் தேதி இரவு 8.30 மணியளவில் ஊழியர்கள் அவருக்கு அறை ஒதுக்கிக் கொடுத்துள்ளனர். பின்னர் இவரது நடவடிக்கையைக் கவனித்த ஊழியர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. விசாரித்தபோது, முதல்வரின் மகன் பெயரைச் கூறியுள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த ஊழியர்கள் மேலதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். நேற்று அங்கு தங்கியிருந்த சந்தோஷ்குமாரிடம் அதிகாரிகள் விசாரித்தனர். அதில், விவசாயத்துறை அமைச்சர் துரைக்கண்ணு மகன் அய்யப்பன் சிபாரிசின்பேரில் தங்கி இருப்பதாக கூறியுள்ளார். இரவு முதல்வரின் நேர்முக உதவியாளர், பகலில் அமைச்சரின் மகன் என முன்னுக்குப்பின் முரணாக பதில் சொல்லியுள்ளார். புகாரின்பேரில் தல்லாகுளம்  போலீசார்  சந்தோஷ்குமாரிடம் விசாரித்தனர்.அப்போது, முதல்வரின் நேர்முக உதவியாளரின் பெயரை சொல்லி அதிகாரிகளை ஏமாற்றி மோசடி செய்தது உறுதியானது. இதுதொடர்பாக தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் அவரது காரை பறிமுதல் செய்தனர். உடன் வந்த அவரது மனைவி மற்றும் குழந்தைகளை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

Related Stories: