பார்வையற்றோருக்காக ரூபாய் நோட்டை கண்டறியும் மொபைல் ஆப்ஸ் வருகிறது: ரிசர்வ் வங்கி தீவிரம்

புதுடெல்லி: பார்வையற்றவர்கள் ரூபாய் நோட்டை கண்டறியும் வகையில் புதிய மொபைல் ஆப்சை உருவாக்குவதில் ரிசர்வ் வங்கி தீவிரம் காட்டி வருகிறது.  தற்போது ஒரு ரூபாய், ₹10, ₹20, ₹50, ₹100, ₹200, ₹500 மற்றும் ₹2,000 நோட்டு புழக்கத்தில் உள்ளன. பார்வையற்றவர்கள் இவற்றை தொட்டு உணரும் வகையில் பிரத்யேக குறியீடுகள் இதில் அச்சிடப்பட்டுள்ளன. ஏற்கெனவே வெளியிட்ட ரூபாய் நோட்டிலும், பண மதிப்பு நீக்கத்துக்கு பிறகு வெளியிட்ட நோட்டிலும் இந்த அடையாளங்கள் உள்ளன. இருப்பினும் அளவுகளில் வேறுபாடுகள் இருக்கிறது.

Advertising
Advertising

 சில சமயம், நூறு ரூபாய்க்கு மேல் மதிப்புடைய நோட்டை பார்வையற்றோர் அடையாளம் காண்பது சிரமமாக உள்ளதாக கூறப்படுகிறது. எனவே,  ஸ்மார்ட் போன்கள் பயன்பாடு அதிகம் உள்ள நிலையில், மொபைல் ஆப்ஸ் மூலமாக ரூபாய் நோட்டை கண்டறியும் வசதியை உருவாக்க ரிசர்வ் வங்கி முடிவு செய்தது. புதிய மற்றும் பழைய மகாத்மா காந்தி வரிசை ரூபாய் நோட்டுகளுக்கு இந்த பிரத்யேக ஆப்ஸ் உருவாக்கப்படுகிறது. மொபைல் கேமரா மூலம் ரூபாய் நோட்டை கண்டறிந்து தெரிவிக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட உள்ளது.  இந்த ஆப்சை விரைவில் உருவாக்கி வெளியிடுவதில் ரிசர்வ் வங்கி தீவிரம் காட்டி வருகிறது. நாடு முழுவதும் உள்ள 80 லட்சம் பார்வையற்றோர் இதனால் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Related Stories: