முகூர்த்தங்கள், திருவிழாக்கள் இல்லாததால் வெள்ளிப் பொருட்கள் விற்பனை 30 சதவீதம் சரிவு: வியாபாரிகள் தகவல்

சேலம்: முகூர்த்தங்கள், திருவிழாக்கள் இல்லாததால் வெள்ளியின் விற்பனை 30 சதவீதம் குறைந்துள்ளதாக வெள்ளி வியாபாரிகள் தெரிவித்தனர்.  தமிழகத்தில் சேலத்தில் தான் வெள்ளிப்பொருட்கள் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இங்கு உற்பத்தி செய்யப்படும் வெள்ளிப்பொருட்கள் மகாராஷ்டிரா, டெல்லி, ஆக்ரா, கொல்கத்தா, உத்தரபிரதேசம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட இடங்களுக்கும், இதை தவிர தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்கு செல்கிறது. இத்தொழிலை நம்பி சேலம் சுற்று வட்டார பகுதிகளில் மட்டும் வெள்ளி வியாபாரிகள், வெள்ளி தொழிலாளர்கள் என ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர்.  கடந்த மூன்று மாதமாக அடுத்தடுத்து முகூர்த்தங்கள், திருவிழாக்கள் இருந்ததால் வெள்ளிப்பொருட்களின் விற்பனை சீராக இருந்தது. 17ம் தேதி ஆடி மாதம் தொடங்குகிறது. இந்த மாதத்தில் முகூர்த்தங்கள் இருக்காது. அடுத்து ஆவணி மாதத்தில் ஒரு சில முகூர்த்தங்கள் இருக்கின்றன. ஆவணியை தொடர்ந்து புரட்டாசியிலும் முகூர்த்தங்கள் இல்லை. இதன் காரணமாக வெள்ளி விற்பனை சரிந்துள்ளதாக வியாபாரிகள் கூறினர்.

இது குறித்து சேலம் வெள்ளி வியாபாரிகள் கூறியதாவது:சேலம் வெள்ளிப்பொருட்களுக்கு வட மாநிலங்களில் எப்போதும் மவுசு உண்டு. கடந்த 3 மாதமாக வெள்ளிப்பொருட்கள் எவ்வித மாற்றமும் இல்லாமல், அவ்வப்போது கிலோவுக்கு ₹500 முதல் ₹1,000 வரை உயர்ந்தது. இந்த நிலையில் தங்கம் விலை ஏறுவதை போல், வெள்ளியின் விலை உயர்ந்து வருகிறது. கடந்த 20 நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ வெள்ளி ₹39 ஆயிரத்திற்கு விற்றது. படிப்படியாக விலை உயர்ந்து கிலோ ₹41 ஆயிரம் வரை அதிகரித்துள்ளது. தங்கத்தை போலவே வெள்ளியின் விற்பனையும், கடந்த சில நாட்களாக மந்தமாக உள்ளது. தற்போது திருவிழாக்கள் மற்றும் முகூர்த்தங்களும் இல்லாததால், கடந்த ஒரு வாரமாக வழக்கத்தை விட 30 முதல் 40 சதவீதம் வெள்ளி வியாபாரம் சரிந்துள்ளது. இதனால், விற்பனையையும் சற்று குறைந்துள்ளது என்றார்.

Related Stories: