சென்னை விமான நிலையத்தில் 1 கோடி மதிப்புள்ள கஞ்சா எண்ணெய் பறிமுதல்: காதல் ஜோடி கைது

மீனம்பாக்கம்: சர்வதேச போதைப் பொருட்கள் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் சென்னையில் இருந்து இலங்கைக்கு போதை பொருட்கள் கடத்துவதாக மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று முன்தினம் இரவில் இருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்தில் சாதாரண உடையில் வந்து தீவிரமாக கண்காணித்துக்கொண்டிருந்தனர். நேற்று காலை 10  மணிக்கு சென்னையில் இருந்து இலங்கை வழியாக மாலத்தீவுக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் செல்வதற்காக  சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு வந்த பயணிகளை மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு  போலீசார் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது மாலத்தீவை சேர்ந்த 22 வயது இளைஞரும் 24 வயது ஒரு இளம்பெண்ணும் காதல் ஜோடியை போல் சுற்றுலா பயணிகள் விசாவில் வந்தனர். அவர்கள் இருவர் மீது மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு சந்தேகம்  ஏற்பட்டது. அவர்களை நிறுத்தி விசாரித்தபோது 2 பேரும் நண்பர்கள் என்றும் இந்தியாவை சுற்றி பார்ப்பதற்காக வந்திருப்பதாக கூறினர். ஆனாலும் அதிகாரிகள் அவர்களை விசாரித்தபோது, ‘‘வெளிநாட்டு சுற்றுலா பயணிகளான எங்களை சமூக  விரோதிகளை போல் ஏன் நடத்துகிறீர்கள்?’’ என்றனர்.

அதற்கு அதிகாரிகள், ‘‘எங்கள் நாட்டின் சட்ட விதிகளின்படி சந்தேகப்படும் யாராக இருந்தாலும் விசாரிப்போம்’’ என அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்களது உடமைகளை சோதனை செய்தபோது அந்த பெண்ணின் கைப்பையில் 4 ஷாம்பு பாட்டில்கள் இருந்தன. அதிகாரிகளுக்கு அதன் மீது சந்தேகம் ஏற்பட்டதால் எடுத்து சோதனையிட வேண்டும் என்றனர். அப்போது மீண்டும் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அவர்களை வெளியில் சென்றுவிடாமல் போலீசார் தனி அறையில் அடைத்து வைத்தனர். ஷாம்பு பாட்டில்களை ஆய்வு கூடத்திற்கு அனுப்பி சோதனை நடத்தினர்.இந்த சோதனை முடிவு நேற்று மாலை வந்தது. அந்த முடிவு அதிகாரிகளை அதிர்ச்சி ஏற்படுத்தியது. ஏனெனில் அதில் இருந்தது ஷாம்பு இல்லை. ‘ஹாசீஸ் ஆயில்’ எனப்படும் கஞ்சாவில் இருந்து எடுக்கப்படும் போதை எண்ணெய் என்பது  தெரியவந்தது. 4 பாட்டில்களிலும் மொத்தம் ஒரு கிலோ இருந்தது. இதன் சர்வதேச மதிப்பு ₹1 கோடி என கூறப்படுகிறது.

இதையடுத்து 2 பேரையும் மத்திய போதை தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்து, அண்ணா நகரில் உள்ள அவர்களது அலுவலகத்துக்கு அழைத்து சென்று விசாரிக்கின்றனர். முதற்கட்ட விசாரணையில் இருவரும் போதை பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்புடையவர்களாக இருக்கலாம் என அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இவர்களது பாஸ்போட்டை ஆய்வு செய்தபோது ஏற்கனவே இதுபோல் பலமுறை சென்னைக்கு வந்து சென்றது தெரிய வந்துள்ளது. அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

Related Stories: