×

கடனில் சிக்கித்தவிக்கும் நிலையில் பாகிஸ்தானுக்கு அடுத்த இடி 40,000 கோடி அபராதம்: சுரங்க விவகாரத்தில் சர்வதேச நீதிமன்றம் உத்தரவு

இஸ்லாமாபாத்: ஆய்வுப்பணிகளை முடித்தபின் தங்கம் மற்றும் தாமிர சுரங்கத்தை, வெளிநாட்டு நிறுவனத்துக்கு குத்தகைக்கு விட பாகிஸ்தான் மறுத்ததால் அந்நாட்டுக்கு, சர்வதேச தீர்ப்பாயம் 40 ஆயிரம் கோடி அபராதம் விதித்துள்ளது. பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தின் சாகை மாவட்டத்தில் ‘ரெகோ டிக்’ என்ற நகரம் உள்ளது. ரெகோ டிக் என்றால் பலூச்சி மொழியில் மணல் குன்றுகள் என அர்த்தம்.  இது ஈரான் மற்றும் ஆப்கன் எல்லையை ஒட்டியுள்ளது. இங்கு தங்கம் மற்றும் தாமிரம் தாதுக்கள் அதிகளவில் உள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டது. ரெகோ டிக் பகுதியில் ஆய்வுகள் மேற்கொண்டு  சுரங்கம் அமைக்கும் முயற்சியில் ‘தி டெத்யான் காப்பர் கம்பெனி(டிசிசி) இறங்கியது. இது சிலி நாட்டைச் சேர்ந்த சுரங்க நிறுவனம் ‘ஆன்டோபகஸ்டா’ மற்றும் கனடாவின் பேரிக் கோல்ட் கார்பரேஷன் நிறுவனம் ஆகியவற்றின்  கூட்டு முயற்சியில் செயல்படும் நிறுவனம். பாகிஸ்தானுடன் ஒப்பந்தம் செய்தபின், இங்கு சுரங்கம் அமைப்பதற்கான ஆய்வுப் பணிகளை டிசிசி நிறுவனம் கடந்த 2010ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முடித்தது. அதன்பின் ரெகோ டிக் பகுதியில் சுரங்கத்தை குத்தகைக்கு எடுக்க பாகிஸ்தானின் பலுசிஸ்தான் நிர்வாகத்திடம் டிசிசி விண்ணப்பித்தது. இதை பலுசிஸ்தான் நிராகரித்துவிட்டது. இதனால் இத்திட்டம் கடந்த 2011ம் ஆண்டு நின்றது. இதை எதிர்த்து பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் டிசிசி நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் கடந்த 2013ம் ஆண்டு தீர்ப்பளித்த அப்போதைய தலைமை நீதிபதி இப்திகார் முகமது சவுத்ரி, ‘ரெகோ டிக் ஒப்பந்தம், பாகிஸ்தானின் சட்டங்களுக்கு முரணாக உள்ளதால், அது செல்லாது’’ என தீர்ப்பளித்தார்.

இதையடுத்து உலக வங்கியின் சர்வதேச தீர்ப்பாய மையத்தில்(ஐசிஎஸ்ஐடி), டிசிசி வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் தீர்ப்பளித்துள்ள சர்வதேச தீர்ப்பாயம் பாகிஸ்தானுக்கு 4.08 மில்லியன் அமெரிக்க டாலர் (₹27 ஆயிரம் கோடி) அபராதமும், 1.87 மில்லியன் அமெரிக்க டாலர் (13 ஆயிரம் கோடி) வட்டியும் விதித்து தீர்ப்பளித்துள்ளது. ஏற்கனவே நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தான், உலக நாடுகளிடம் கை ஏந்தி வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தானுக்கு சர்வதேச தீர்ப்பாயம் ₹40 ஆயிரம் கோடி அபராதம் விதித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விசாரணைக்குழு அமைக்க இம்ரான்கான் உத்தரவு
பாகிஸ்தான் இந்த இக்கட்டான நிலையை சந்திக்க காரணம் என்ன? எதிர்காலத்தில் இது போன்ற தவறுகள் நடக்காமல் இருக்க பாகிஸ்தான் கற்றுக் கொண்ட பாடங்கள் என்ன? இந்த தவறுக்கு யார் காரணம் என்பதை கண்டறிய விசாரணைக்கு குழுவை அமைக்கும்படி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் உத்தரவிட்டுள்ளார்.

Tags : debt, Pakistan, 40,000, International court,mining
× RELATED குழந்தைகளுக்கு எதிரான குற்ற...