லார்ட்ஸ் மைதானத்தில் இன்று பரபரப்பான பைனல் புதிய சாம்பியனாகும் முனைப்புடன் இங்கிலாந்து - நியூசிலாந்து மோதல்

லண்டன்: ஐசிசி உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடரின் புதிய சாம்பியன் யார் என்பதை தீர்மானிக்கும் பரபரப்பான இறுதிப் போட்டியில், இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி, இந்திய நேரப்படி பிற்பகல் 3.00 மணிக்கு தொடங்குகிறது.இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகள் இணைந்து நடத்தும் இந்த தொடரில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான் உட்பட மொத்தம் 10 அணிகள் லீக் சுற்றில் மோதின. ஒவ்வொரு அணியும் மற்ற 9 அணிகளுடன் தலா ஒரு முறை மோதிய நிலையில், புள்ளிப் பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடித்த இந்தியா (15), ஆஸ்திரேலியா (14), இங்கிலாந்து (12), நியூசிலாந்து (11) அணிகள் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறின. மற்ற 6 அணிகள் வெளியேற்றப்பட்டன.முதல் அரை இறுதியில் இந்திய அணியுடன் மோதிய நியூசிலாந்து 18 ரன் வித்தியாசத்தில் போராடி வென்று தொடர்ந்து 2வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. 2வது அரை இறுதியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்ட இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அடித்து நொறுக்கி 4வது முறையாக பைனலுக்கு தகுதி பெற்றது.முதல் முறை சாம்பியன்: உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடரில் ஆஸ்திரேலிய அணி அதிகபட்சமாக 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் தலா 2 முறையும், பாகிஸ்தான், இலங்கை அணிகள் தலா ஒரு முறையும் கோப்பையை முத்தமிட்டுள்ளன. இம்முறை இறுதிப் போட்டியில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதுவதால், யார் வென்றாலும் புதிய சாம்பியன் உதயமாவது உறுதி.

1979, 1987, 1992ல் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருந்த இங்கிலாந்து அணி மூன்று முயற்சியிலும் தோல்வியைத் தழுவியுள்ளது. தற்போது கோப்பையை வெல்ல 4வது முறையாகக் கிடைத்திருக்கும் வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள அந்த அணி முனைப்புடன் களமிறங்குகிறது. தொடக்க வீரர்கள் ஜேசன் ராய், பேர்ஸ்டோ இருவரும் அற்புதமான பார்மில் உள்ளனர். குறிப்பாக, ஜேசன் ராயின் அதிரடி ஆட்டம் எதிரணி பவுலர்களுக்கு சிம்ம சொப்பனமாகவே அமைந்துள்ளது. ஜோ ரூட், கேப்டன் மோர்கன், பட்லர், ஸ்டோக்ஸ் என்று இங்கிலாந்து பேட்டிங் வரிசை எத்தகைய சவாலுக்கும் தயாராக உள்ளது. முதல் 3 வீரர்கள் இணைந்து இதுவரை 1,471 ரன் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. பந்துவீச்சிலும் கிறிஸ் வோக்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர், பென் ஸ்டோக்ஸ், அடில் ரஷித் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். சொந்த மண்ணில் விளையாடுவதும், உள்ளூர் ரசிகர்களின் ஆதரவும் இங்கிலாந்து அணிக்கு கூடுதல் சாதகமாக இருக்கும்.

அதே சமயம், 2015 உலக கோப்பை பைனலில் ஆஸ்திரேலியாவிடம் தோற்று கோப்பை வெல்லும் வாய்ப்பை நழுவவிட்ட நியூசிலாந்து அணி, இம்முறை பட்டம் வென்று சாதனை படைக்கும் உறுதியுடன் வரிந்துகட்டுகிறது. லீக் சுற்றின் கடைசி 3 போட்டியில் தொடர்ச்சியாக தோல்வியைத் தழுவியதால் சற்று சோர்ந்து போயிருந்த அந்த அணி வீரர்கள், அரை இறுதியில் பலம் வாய்ந்த இந்திய அணியை வீழ்த்தியதால் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.

கேப்டன் கேன் வில்லியம்சன், ராஸ் டெய்லர் இருவரும் அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் முதுகெலும்பாக விளங்குகின்றனர். இதுவரை பெரிய ஸ்கோர் அடிக்க முடியாமல் தடுமாறி வரும் தொடக்க வீரர் மார்டின் கப்தில், பைனலில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் உறுதியுடன் உள்ளார். மேட் ஹென்றி, போல்ட், பெர்குசன் வேகக் கூட்டணியும், சான்ட்னரின் சுழலும் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்க காத்திருக்கிறது.இரு அணிகளுமே முதல் முறையாக உலக கோப்பையை வென்று சாதனை படைக்கும் முனைப்புடன் உள்ளதால், ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி. மழை பெய்ய வாய்ப்பு இல்லை என வானிலை அறிக்கை வந்துள்ளதால், ரசிகர்களுக்கு சுவாரசியமான போட்டி காத்திருக்கிறது.நியூசிலாந்து: கேன் வில்லியம்சன் (கேப்டன்), டிரென்ட் போல்ட், லோக்கி  பெர்குசன், மேட் ஹென்றி, கோலின் மன்றோ, ஹென்றி நிகோல்ஸ், ஈஷ் சோதி, ராஸ்  டெய்லர், டாம் பிளண்டெல், கோலின் கிராண்ட்ஹோம், மார்டின் கப்தில், டாம்  லாதம், ஜிம்மி நீஷம், மிட்செல் சான்ட்னர், டிம் சவுத்தீ.

இங்கிலாந்து:  இயான் மோர்கன் (கேப்டன்), ஜோப்ரா ஆர்ச்சர், ஜோஸ் பட்லர் (விக்கெட்  கீப்பர்), லயம் டாவ்சன், அடில் ரஷித், ஜேசன் ராய், ஜேம்ஸ் வின்ஸ், மார்க்  வுட், மொயீன் அலி, ஜானி பேர்ஸ்டோ, டாம் கரன், லயம் பிளங்க்கெட், ஜோ ரூட்,  பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ்.

நியூசிலாந்து

1. இலங்கையிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

2. வங்கதேசத்திடம் 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

3. ஆப்கானிஸ்தானிடம் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

4. இந்தியாவுடனான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது

5. தென் ஆப்ரிக்காவிடம் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

6. வெஸ்ட் இண்டீசிடம் 5 ரன் வித்தியாத்தில் வெற்றி

7. பாகிஸ்தானிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி

8. ஆஸ்திரேலியாவிடம் 86 ரன் வித்தியாசத்தில் தோல்வி

9. இங்கிலாந்திடம் 119 ரன் வித்தியாசத்தில் தோல்வி

அரையிறுதி: இந்தியாவிடம் 18 ரன் வித்தியாசத்தில் வெற்றி

இங்கிலாந்து

1. தென் ஆப்ரிக்காவிடம் 104 ரன் வித்தியாசத்தில் வெற்றி

2. பாகிஸ்தானிடம் 14 ரன் வித்தியாசத்தில் தோல்வி

3. வங்கதேசத்திடம் 106 ரன் வித்தியாசத்தில் வெற்றி

4. வெஸ்ட் இண்டீசிடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

5. ஆப்கானிஸ்தானிடம் 150 ரன் வித்தியாசத்தில் வெற்றி

6. இலங்கையிடம் 20 ரன் வித்தியாசத்தில் தோல்வி

7. ஆஸ்திரேலியாவிடம் 64 ரன் வித்தியாசத்தில் தோல்வி

8. இந்தியாவிடம் 31 ரன் வித்தியாசத்தில் வெற்றி

9. நியூசிலாந்திடம் 119 ரன் வித்தியாசத்தில் வெற்றி

அரையிறுதி: ஆஸி.யிடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

Related Stories: