×

ரெட்ரோ ஸ்டைலில் யமஹா புதிய பைக்

உலகின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான யமஹா, இளைஞர்களை குறி வைத்தே அதன் தயாரிப்புகள் அனைத்தையும் உருவாக்கி வருகிறது. அந்த வகையில், இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும்  துடிப்பான தோற்றம் கொண்ட பைக் மற்றும் ஸ்கூட்டர்களை அந்த நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.சமீபத்தில், என்ட்ரீ லெவல் ஸ்போர்ட்ஸ ரக பைக்கான எம்டி15, ஆர்15, ஆர்25 உள்ளிட்ட மாடல்களை அந்நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருந்தது.இந்நிலையில், யமஹா நிறுவனம் அதன் என்ட்ரீ லெவல் வரிசை பைக்குகளுடன், ரெட்ரோ ஸ்டைலிலான பைக்கை சேர்க்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, யமஹா எக்ஸ்எஸ்ஆர் 155 என்ற புதிய மாடலை அறிமுகம் செய்ய  இருக்கிறது. மிக விரைவில் அறிமுகத்திற்கு தயாராகி வரும் இப்புத்தம் புதிய ரெட்ரோ லுக் கொண்ட எக்ஸ்எஸ்ஆர்155 பைக், என்ட்ரீ லெவல் சிறிய ரக பைக்காக உருவாக்கப்பட்டுள்ளது. இது, ஏற்கனவே சர்வதேச சந்தையில் விற்பனையில்  இருக்கும் எக்ஸ்எஸ்ஆர் 700 மற்றும் எக்ஸ்எஸ்ஆர் 900 மாடல்களுக்கு கீழாக இருக்கும் என கூறப்படுகிறது. மேற்கண்ட பைக் மாடல்களில் இருக்கும் சில வசதிகள் இப்புதிய எக்ஸ்எஸ்ஆர்155 பைக்கிலும் சேர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

யமஹாவின் இந்த என்ட்ரீ லெவல் எக்ஸ்எஸ்ஆர்155 பைக் முதலில் இந்தோனேசியா நாட்டில்தான் விற்பனைக்கு அறிமுகமாக இருக்கிறது. இதன்பின்னரே, இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் களம் இறங்க உள்ளது. இந்த பைக், நடப்பாண்டின்  இறுதியில் இந்தோனேசியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. யமஹாவின் இந்த எக்ஸ்எஸ்ஆர்155 பைக், ஹோண்டா நிறுவனத்தின் சிபிஆர் 150ஆர் பைக்கிற்கு போட்டியாக விற்பனைக்கு களமிறக்கப்படுகிறது. அந்த பைக்கின் இன்ஜின்  திறனுக்கு போட்டியான இன்ஜினையே எக்ஸ்எஸ்ஆர்155 பைக் பெற்றுள்ளது.அந்த வகையில், 155சிசி திறன்கொண்ட லிக்யூட் கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதே இன்ஜின்தான் ஆர்15 வி3.0 மற்றும் எம்டி-15 ஆகிய மாடல் பைக்குகளில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 6 கியர்பாக்ஸுடன் இணைந்து  இயங்கும். மேலும், இது 19.3 பிஎஸ் பவரையும், 14.7 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் பெற்றது. எக்ஸ்எஸ்ஆர்155 பைக்கில் சிறப்பான வசதியாக ஸ்டாண்டர்டு ஸ்லிப்பர் கிளட்ச் வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இத்துடன்,  சொகுசான சஸ்பென்ஷன் வசதிக்காக பைக்கின் முன்பக்கத்தில் பிரிமியம் அப்சைட்-டவுண் போர்க்கும், பின்பக்கத்தில் மோனோசாக் யூனிட்டும் பொருத்தப்பட்டுள்ளது. இவை இரண்டும், பைக், பள்ளம் மேடு நிறைந்த சாலைகளில் செல்லும்போது,  பயணத்தை சிறப்பானதாக மாற்றியமைக்க உதவும்.இந்த பைக்கின் கட்டமைப்பிற்காக டிரெல்லிஸ் பிரேமிற்கு பதிலாக, டெல்டா பாக்ஸ் பிரேமை யமஹா நிறுவனம் பயன்படுத்தியுள்ளது. மேலும், எக்ஸ்எஸ்ஆர்155 பைக்கை அலங்கரிக்க, ஆர்15 வி3.0 மற்றும் எம்டி-15 ஆகிய பைக்குகளின் பாகங்கள்  சிலவற்றையும் பயன்படுத்தியுள்ளது.


Tags : Yamaha ,new bike ,retro style
× RELATED யு.எஸ். ஓபன் கிராண்ட்ஸ்லாம்: மகளிர்...