போதை மாத்திரைக்கு அடிமையான மாணவனை தாக்கிய தந்தை கைது

சென்னை: சென்னை அண்ணாசாலை வெங்கடேசன் நாயக்கர் தெருவை சேர்ந்த 16 வயது சிறுவன், அதே பகுதியில் உள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறான். இச்சிறுவனுக்கு, சக மாணவர்கள் மூலம் போதை மாத்திரை பயன்படுத்தும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த மாணவன் போதையில் இருந்துள்ளான். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவனின் தந்தை, கண்டித்துள்ளார். மேலும், ஆத்திரத்தில் அடித்து உதைத்ததாக தெரிகிறது. அப்போது மாணவன், மாடி படிக்கட்டு வழியாக உருண்டு கீழே விழுந்துள்ளான். இதில் மாணவனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக மாணவனை தந்தையே சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவனையில் சேர்த்தார். அங்கு ஆபத்தான நிலையில் மாணவனுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து அண்ணாசாலை போலீசார் வழக்கு பதிந்து, மாணவனின் தந்தையை கைது செய்தனர்.


× RELATED கத்தியுடன் வந்த மாணவன் கைது