சென்னை மெட்ரோ ரயிலில் 4,824 மாணவர்கள் கல்வி பயணம்

சென்னை: அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளைச்  சேர்ந்த 4,824 மாணவ, மாணவியர்கள் சென்னை மெட்ரோ ரயிலில் கல்விப் பயணம் மேற்கொண்டுள்ளனர். இதுகுறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை: மெட்ரோ ரயிலை பற்றியும், அதில் உள்ள வசதிகள் மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்தும் அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளின் மாணவ, மாணவியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் மெட்ரோ ரயில் நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. அதன்படி, சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து கோயம்பேடு வழியாக விமான நிலையம் மற்றும் பரங்கிமலை வரையும், வண்ணாரப்பேட்டையில் இருந்து ஏ.ஜி டி.எம்.எஸ் வழியாக விமான நிலையம் வரையும் மெட்ரோ ரயிலில் கல்விப் பயணம் ஏற்பாடு செய்து அழைத்து செல்லப்படுகின்றனர்.

மாதம்தோறும் இந்த கல்விப் பயணங்கள் மேற்கொள்ளப்படுகிறது. கடந்த 2018-19ம் கல்வி ஆண்டில் மொத்தம் 31,178 மாணவ, மாணவியர் மெட்ரோ ரயிலில் பயணித்து பயன்பெற்றுள்ளனர். 2019-20ம் ஆண்டிற்கான கல்விப் பயணம் 2019 ஜூன் 4 முதல் தொடங்கியது. அந்த வகையில், கடந்த ஜூன் மாதத்தில் மொத்தம் 4,284 மாணவர்கள் மெட்ரோ ரயிலில் கல்விப் பயணம் மேற்கொண்டுள்ளனர். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

× RELATED நிர்ணயிக்கப்பட்டதை விட கூடுதல்...